சிறாரிடம் கிட்டப் பார்வையைத் தடுப்பதற்கான ஆய்வு

2 mins read
6414104b-429c-4302-855f-e80f2e4ef39c
-

கேம்­டன் மருத்­துவ நிலை­யத்­தில் நேற்று புதிய 'மயோ­பியா நிபு­ணத்­துவ நிலை­யம்' திறக்­கப்­பட்­டுள்­ளது. கண் ஒட்டுவில்லை தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 'மெனி­கான்' உடன் இணைந்து உல­கெங்­கும் உள்ள வல்­லு­நர்­க­ளின் பங்­கா­ளித்­து­வத்­து­டன் இந்த நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

'மயோ­பியா' எனப்­படும் கிட்­டப் பார்­வைக் குறை­பாட்­டிற்கு சிகிச்சை அளிப்­ப­து­டன் அது தொடர்­பான ஆய்வு, கல்வி நிலை­ய­மா­க­வும் இது செயல்­படும்.

இதி­லுள்ள கண் மருத்­துவ நிபு­ணர்­கள் சிங்­கப்­பூர் சிறு­வர்­களி­டம் கிட்­டப் பார்வை பாதிப்பு ஏற்­ப­டா­மல் தவிர்ப்­பது தொடர்­பான ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

முன்­ன­தாக பிள்­ளை­கள் வெளிப்­புற விளை­யாட்­டில் ஈடு­படும்­போது சூரிய வெளிச்­சத்­தில் உள்ள புற ஊதாக்கதிர்­கள் 'டோபா­மைன்' எனும் வேதிப் பொருள் உற்­பத்­தி­யைத் தூண்­டு­வ­தா­க­வும் அது கிட்­டப்­பார்­வை­யைத் தடுக்­கும் ஆற்­றல் கொண்­டது என்­றும் ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் பிள்­ளை­கள் வார நாள்­களில் சரா­ச­ரி­யாக ஒன்று முதல் ஒன்­றரை மணி நேரம் வெளிப்­பு­றங்­களில் செல­வி­டு­வ­தா­க­வும் வார இறுதி நாள்­களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் செல­வி­டு­வ­தா­க­வும் ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

எனவே புதிய நிலை­யத்­தின் ஆய்­வா­ளர்­கள், புற ஊதாக் கதிர்­களில் 'டோபா­மைன்' உற்­பத்­திக்­குத் தேவை­யான முக்­கிய அம்­சத்­தைக் கண்­ட­றிய முயற்சி செய்வர்.

பிள்­ளை­கள் படிப்­ப­தற்­கும் எழு­து­வ­தற்­கும் ஏது­வான வெளிச்­சத்­தை­யும் வெளிப்­பு­றத்­தில் செல­விட வேண்­டிய நேரத்­தை­யும் பரிந்­து­ரைக்க கண் மருத்­துவ நிபு­ணர்­க­ளுக்கு இது உத­வும்.

சிங்­கப்­பூ­ரில் பொது­வாக, பிள்­ளை­க­ளுக்கு எட்டு வய­துக்­குப் பிறகு கிட்­டப் பார்­வைக் குறை­பாடு ஏற்­ப­டத் தொடங்­கு­கிறது.

தொடக்­க­நிலை ஆறாம் வகுப்பு படிக்­கும்­போது 65 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட பிள்­ளை­கள் இத­னால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிறகு சிங்கப்பூரில் கிட்­டப் பார்வை பாதிப்பு கண்­ட­றி­யப்­படும் சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை இரட்­டிப்­பா­கி­யுள்­ள­தாக மருத்­து­வர்­கள் கூறி­னர்.