இணைய விற்பனை மோசடி தொடர்பில் ஆடவர் கைது
இணையத்தில் பொருள்கள் விற்பனை செய்வதாக 15க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியதாகக் கூறப்படும் 35 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் பிரபலமான 'பேர்பிரிக்' எனப்படும் கரடியின் வடிவம் கொண்ட பிளாஸ்டிக் பொம்மைகள், மின்னூட்டக் கருவிகள் போன்றவற்றை விற்பதாக 'கேரோஸல்' தளத்தில் அவர் விளம்பரம் செய்திருந்தார்.
பாதிக்கப்பட்டோர் மொத்தம் 5,600 வெள்ளியை அவரிடம் இழந்ததாகக் காவல்துறை கூறியது.
ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும்.
பிணையில் வந்த ஆடவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு
வீடு புகுந்து திருடியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 33 வயது இம்ரன் சஃபிக் முகமது ரஷீது பிணையில் வெளிவந்தபோது 61 வயது மாதுக்கு எதிராகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 13ஆம் தேதி விடியற்காலை நடந்த சம்பவத்தின்போது தன்னிடம் கத்தி இருப்பதாக மாதை அவர் மிரட்டியதாகக் கூறப்பட்டது.
நேற்று காணொளி வாயிலாக இடம்பெற்ற விசாரணையில் தனது அன்னைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆடவர் பிணையில் விடுவிக்கக் கோரினார். சென்ற முறை பிணையில் வெளிவந்தபோது அவர் குற்றச்செயலில் ஈடுபட்டதைச் சுட்டிய நீதிபதி பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார். மொத்தம் 22 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
பாலியல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவாற்றல் பயிற்சி
ஆசிரியர் பயிற்சி பெறும் அனைவருக்கும் 2026ஆம் ஆண்டில் இருந்து செயற்கை நுண்ணறிவாற்றலைக் கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
தேசியக் கல்விக் கழகத்தில் பட்டக் கல்வி, முதுநிலைப் பட்டக் கல்வி பயில்வோருக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும் என்று கழகம் தெரிவித்தது. இதன் தொடர்பிலான ஆய்வில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிய 'ஏஐ@என்ஐஇ' எனும் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நேற்று முன்தினம் நடந்த இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கலந்துகொண்டார். போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் உண்டாகும் வாய்ப்புகளை சிங்கப்பூர் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார் அவர்.
உக்கிரமான நோயாளிகளைச் சமாளிக்கும் பயிற்சி
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம், தாதிமை ஆகிய பாடத்திட்டங்களைப் பயிலும் மாணவர்களுக்கு, உக்கிரமான நோயாளிகளைக் கையாள்வதற்கான மெய்நிகர் பயிற்சி விரைவில் வழங்கப்படவிருக்கிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப்பரவலால் மன நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிதது. சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு எதிரான வன்செயல்களும் அதிகரித்தன.
இத்தகைய நோயாளிகளைச் சமாளிக்கும் மெய்நிகர் பயிற்சிக்கு பல்கலையின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. 'விர்ச்சுவல் ரியாலிட்டி' முறையில் நோயாளிகள் ஆத்திரப்படும் சம்பவங்கள் பாவனையாகச் சித்திரிக்கப்பட்டு மாணவர்கள் அதில் பயிற்சி பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

