நாடுகள் தங்கள் தனிப்பட்ட தற்காப்பை அதிகரித்துக் கொண்டாலும் கூட்டுப் பாதுகாப்பைக் கட்டிஎழுப்பும் வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.
"புவிசார் அரசியல் பதற்றங்கள், உக்ரேன் போர் ஆகியவை இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகள் தங்கள் தற்காப்பு நிலைகளை மறுபரிசீலனை செய்ய காரணமாக இருக்கின்றன.
"பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட நாடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள தம்மால் ஆனதைச் செய்யும். ஒட்டுமொத்தமாக, நாம் அனைவரும் மற்றவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணர செய்யக்கூடும். அப்படி இருந்தால் பின்னர் நாம் அனைவரும் மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம். எனவே கூட்டுப் பாதுகாப்பைப் பெற மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்," என்று திரு லீ வலியுறுத்தினார்.
தோக்கியோவுக்கு தாம் மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின் முடிவில் பிரதமர் லீ, நேற்று சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நேற்று முன்தினம், ஜப்பானிய ஊடகக் குழுவான நிக்கெய் ஏற்பாடு செய்த ஆசியாவின் எதிர்காலம் குறித்த 27வது அனைத்துலக மாநாட்டின் முக்கிய உரையில், பிரதமர் லீ, பிளவுபட்ட இவ்வுலகில் பகைமை பாராட்டுவதற்கான அபாயங்கள் அதிகம் என்பதால், பிணைப்புகளை உருவாக்கும் வகையில் பாதுகாப்பிலும் பொருளியலிலும் பல நாடுகளும் அடங்கிய, மிகுந்த ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு உறுதியான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒத்துழைப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இது, நாடுகள் ஒன்றுக்கொன்று பொருளாதார வெற்றியில் பங்களிப்பதை உறுதிசெய்து, பிரச்சினைகளைச் சமாளிக்க அவற்றுக்கு ஊக்கமளிக்கும்.
"இதனால்தான், கடந்த திங்கட்கிழமையன்று தோக்கியோவில் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் புதிய இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் (ஐபிஇஎஃப்) சிங்கப்பூர் பங்கேற்றது. அதே நேரத்தில் சிங்கப்பூர் சீனாவின் வர்த்தகப் பாதை பெருந்திட்டத்தையும் உலகளாவிய மேம்பாட்டு திட்டத்தையும் ஆதரிக்கிறது.
"இரண்டும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை என்று நான் பார்க்கவில்லை அல்லது ஒரு பக்கம் அதன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதால் அது மறுபக்கத்திற்கு நிலைமையை மோசமாக்கிவிடும் என்றும் நினைக்கவில்லை," என்று பிரதமர் லீ நேற்று விவரித்தார்.
கடந்தகால நிகழ்வுகளின் காரணமாக ஜப்பான் சர்ச்சைக்குஉரிய சூழ்நிலைகளை அவ்வப்போது சந்தித்து வருகிறது என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டாலும், காலமாற்றம், தலைமுறைகள் ஆகியவற்றைக் கடந்து சென்று, புதிய உத்திபூர்வ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவ்வாட்டார பாதுகாப்பில் அந்நாடு அதிக பங்கு வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று விளக்கினார்.
"அதற்கு சிறந்த வழி, நீண்ட காலமாக நீடித்திருக்கும் வரலாற்றுச் சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வருவதே ஆகும். இது தனிப்பட்ட நாடுகளுடன் ஜப்பான் கொண்டிருக்கும் இருதரப்பு உறவையும் இவ்வட்டார பாதுகாப்புக்கு அது மேலும் மதிப்பு சேர்க்கும் வகையில் நடந்துகொள்கிறது என்பதை நிரூபிக்கும் திறனையும் பொறுத்திருக்கிறது," என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

