சிங்கப்பூரின் ஆறு பழமைப் பாதுகாப்புக் கட்டடங்களை நினைவுபடுத்தும் வகையில் சிங்கப்பூர் அஞ்சல் நிறுவனம் ஆறு அஞ்சல்தலைகளை வெளியிட்டு உள்ளது.
மெர்லயன் பூங்காவுக்கு அருகில் உள்ள ஃபுல்லர்டன் வாட்டர்போட் ஹவுஸ், தஞ்சோங் பகாரில் உள்ள மேக்ஸ்வெல் சேம்பர்ஸ், விட்டில் இந்தியாவின் எண் 9, நோரிஸ் ரோடு கட்டடம், நகர மண்டபத்துக்கு அருகில் உள்ள 36, 38 ஆர்மீனியன் ஸ்திரீட், கம்போங் கிளாமுக்கு அருகில் உள்ள 13 பாகாங் ஸ்திரீட், போட் கீக்கு அருகில் உள்ள 79 சர்க்குலர் ரோடு ஆகியவையே அந்த ஆறு பழமைப் பாதுகாப்புக் கட்டடங்கள்.
இப்போது அந்தக் கட்டடங்கள் வர்த்தகம், அலுவலகம், குடியிருப்பு ஆகியவற்றுக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
கலை அலங்கார பாணியை உள்ளடக்கிய பல கட்டடங்கள் 1930களுக்கும் 1950களுக்கும் இடையில் சிங்கப்பூரில் கட்டப்பட்டன. அவற்றில் பலவற்றுக்கு, அஞ்சல்தலைகளில் இடம்பெற்றுள்ள ஆறு கட்டடங்கள் உட்பட, நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் பின்னர் பழமைப் பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த கட்டடக்கலை பாணி 1900களின் முற்பகுதியில் பாரிஸில் இருந்த கட்டடங்களைப் பிரதிபலிக்கின்றன. இது இடை யறாக் கோடுகள், நீள்சதுர வடிவங்கள், முகப்பில் எந்த அலங்காரமும் இல்லாதது என அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டடக்கலை வடிவத்திலிருந்து மாறியிருப்பதைக் குறிக்கிறது.
இந்த பாணி பின்னர் 1930களுக்கும் 1960களுக்கும் இடையில் உலகின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அஞ்சல்தலைகள் 30 காசுக்கும் $1.50க்கும் இடைப்பட்ட விலையில் நேற்று முதல் விற்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் முழுத் தொகுப்பை $5.15க்கு வாங்கிக்கொள்ளலாம்.

