ஜாலான் புக்கிட் மேரா, புளோக் 2இல் வசிக்கும் குடியிருப்பாளர்களும் வர்த்தக உரிமையாளர்களும் நேற்றுக் காலை தானாகவே காசநோய் பரிசோதனைக்காக வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் அந்நோய் குறித்த கவலை தென்படவில்லை.
குவீன்ஸ்டவுன் ஹோக் சான் மண்டல வசிப்போர் குழுவின் நிலையத்தில் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை பரிசோதனை நடைபெறும்.
அந்த நிலையத்துக்கு நேற்றுக் காலை 9 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு சென்று பார்க்கையில், பத்துப் பேருக்கு மேற்பட்டவர்கள் அங்கு வரிசை பிடித்து நின்றிருந்தனர். ஆனால் அந்தக் கூட்டம் பிற்பகல் 1 மணிக்கெல்லாம் குறைந்துவிட்டது.
புளோக் 2இல் இவ்வாண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை ஏழு பேருக்கு காசநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து சுகாதார அமைச்சு, இலவச காசநோய் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தது.
காசநோய் பெரும்பாலும் நுரையீரலைப் பாதிக்கக்கூடிய தொற்றுநோய். பரிசோதனைக்கு வருவோரிடம் நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க கேள்விகள் கேட்கப்படும். பின்னர் ரத்த பரிசோதனை, நெஞ்சு எக்ஸ்ரே ஆகியவை காசநோய் பரிசோதனையின்போது மேற்கொள்ளப் படும்.
பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை தவிர, ஏழு நடமாடும் குழுக்கள் அந்த புளோக்கில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிலையத்துக்கு வர முடியாதவர்களுக்காக பரிசோதனையை அவர்களின் வீட்டிலேயே நடத்தும்.
அந்த நடமாடும் குழுவில், தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தைச் சேர்ந்த குறைந்தது மூவர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை மிகவும் வசதியாக உள்ளது என்று அங்கு வசிக்கும் 67 வயது திரு போ பின் லீ தெரிவித்தார்.

