எதிர்காலத்தில் விமானப் போக்குவரத்து மையங்களுக்கு இடையே போட்டித்தன்மை அதிகரிக்கும்போது சிங்கப்பூர் முன்னணியில் இருப்பதற்கு முனையம் 5 அவசியம் என்று ஆசிய-பசிபிக் அனைத்துலக விமான நிலையங்கள் மன்றத்தின் தலைமை இயக்குநர் திரு ஸ்டெஃபனோ பேரோன்சி கூறிஉள்ளார்.
"விமானப் போக்குவரத்துத் துறை 2024ஆம் ஆண்டு வாக்கில் முழுமையாக மீண்டுவந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த நிலையில் நம்மால் கட்ட முடிந்ததைக் காட்டிலும் விமானப் போக்குவரத்தும் அதற்கான தேவையும் மிக விரைவாகவே அதிகரிப்பது முக்கியச் சவாலாக இருந்திடும்," என்றார் அவர்.
ஈராண்டுக்குப் பின், முனையம் 5ன் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடரலாம் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இம்மாதம் 17ஆம் தேதியன்று அறிவித்திருந்தார். இந்த முடிவே சரி என்று திரு பேரோன்சி கூறினார். இரண்டு, மூன்று ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நீண்ட காலம் காத்திருந்தாலும் இங்கு வரவேண்டிய வாய்ப்பு வேறிடத்திற்குச் சென்றுவிடலாம். சாங்கி விமான நிலையத்திற்குப் போட்டி தரக்கூடிய தரப்புகள் உள்ளன," என்று அவர் கூறினார்.
விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய அதிகரிப்பைக் கையாள்வதற்கு, தானியக்க அமைப்புமுறையும் நீடித்த நிலைத்தன்மை அம்சமும் கொண்ட பெரிய விமான நிலையங்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். முக்கியமாக, ஆசிய நாடுகளுக்கு இதுபோன்ற பெரிய விமான நிலையங்கள் முக்கியம் என்றார் அவர்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 2040ஆம் ஆண்டு வரை பதிவாகக்கூடிய விமானப் போக்குவரத்து அதிகரிப்பு, ஆண்டுக்கு 4.7 விழுக்காடாக இருக்கலாம் என்ற முன்னுரைப்பைப் பகிர்ந்துகொண்டார்.
பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கும் நிலையில் நெரிசலைத் தவிர்ப்பதற்கு விமான நிலைங்களின் செயல்முறைகள் மேலும் சுமுகமாக இருக்க வேண்டும். பயணத்தைத் துரிதப்படுத்த விமான நிலையங்கள் அதிகளவில் தொழில்நுட்பம், அங்க அடையாள அமைப்புமுறை போன்றவற்றில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றார் திரு பேரோன்சி.
2035ஆம் ஆண்டு வாக்கில் முனையம் 5 செயல்படத் தொடங்கலாம். இருப்பினும் ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தவும் புதிய செயல்முறைகள் தொடர்பில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விமான நிலையங்களுக்கு நேரம் தேவைப்படும் என்று அவர் எச்சரித்தார்.

