கஞ்சா கடத்தல்: இருவரை நீதிமன்றம் விடுவித்தது

கஞ்சா கடத்தல்: இருவரை நீதிமன்றம் விடுவித்தது

2 mins read
5846142b-536e-40dd-a965-bb198ab4e1fb
-

போதைப்­பொ­ருள் கடத்­தி­ய­வர்­கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட இரண்டு பேரை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று விடு­வித்­தது. அந்த இரு­வ­ரில் ஒரு­வ­ருக்கு முன்னதாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்டிருந்தது. ராஜ் குமார் அய்­யா­சாமி, 40, என்­ப­வர் தனக்கு எதி­ரான குற்­றத் தீர்ப்­பை­யும் கட்­டாய மரண தண்­ட­னை­யை­யும் எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்து இருந்­தார்.

அதைத் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் தலை­மை­யில் மூன்று நீதிபதி கொண்ட குழு ஏற்­றுக்­கொண்­டது.

அதே­போல, ராம­தாஸ் பொன்­னு­சாமி, 41, என்­ப­வர் தனக்கு விதிக்­கப்­பட்ட ஆயுள் தண்­ட­னை­யை­யும் 15 பிரம்­ப­டித் தண்­ட­னை­யை­யும் எதிர்த்து செய்­தி­ருந்த மேல்­மு­றை­யீட்­டை­யும் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் அனு­ம­தித்­தது.

போதைப்­பொ­ரு­ளின் தன்மை பற்றி இருவரும் அறிந்து இருந்­தார்­களா, இல்­லையா என்­ப­தி­லேயே மேல்­மு­றை­யீட்டு விசாரணை ஒரு­மித்த கவ­னம் செலுத்­தி­யது. 1.875 கிலோ­ எடைக்குக் குறை­யாத அள­வி­லான கஞ்சா தொடர்­பில் இரு­வர் மீதும் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கஞ்சா இருந்த பையை ராம­தாஸ் 2015ஆம் ஆண்டு செப்­டம்­பர் 21ஆம் தேதி ராஜி­டம் கொடுத்­தார் என்­பதை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் கண்­ட­னர். சிங்­கப்­பூ­ர­ரான ராஜ், தன்­னு­டைய பொறுப்­பில் போதைப்­பொ­ருள் இருந்­ததை ஆட்­சே­பிக்­க­வில்லை. ஆனால், விநி­யோ­கத்­தில் தவறு நிகழ்ந்­து­விட்­டது என்று தன்­னு­டைய வழக்­க­றி­ஞர் ரமேஷ் திவாரி மூலம் அவர் வாதா­டி­னார்.

'பட்­டர்­ஃபிளை' என்ற கஞ்சா போன்ற போதையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய செயற்கை ரசா­ய­னப் பொருள் கலந்த புகை­யி­லை­யைத் தான் கேட்டு இருந்­த­தா­க­வும் அதைப் பெறு­வ­தற்­கா­கச் சென்றபோது கஞ்சா இருந்த பையைத் தான் பெற்­றுக்­கொண்­டு­விட்­ட­தா­க­வும் ராஜ் வாதா­டி­னார்.

அந்­தப் பையை ராஜி­டம் கொடுத்­த­தா­கக் கூறப்­பட்­டதை மலே­சி­ய­ரான ராம­தாஸ் மறுக்­க­வில்லை. ஆனால், அதி­லி­ருந்த பொரு­ளின் தன்மை பற்றி தனக்­குத் தெரி­யாது என்று தனது வழக்­க­றி­ஞ­ர் இயூ­ஜின் துரை­சிங்­கம் மூலம் அவர் வாதா­டி­னார்.

தான் ஓட்­டிச் சென்ற லாரி­யில் ரசா­ய­னம் தெளிக்­கப்­பட்ட புகை­யிலை அடங்­கிய நான்கு பைகள் வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக தன்­னி­டம் கூறப்­பட்­டது என்­றும் ராம­தாஸ் விசா­ர­ணை­யில் தெரி­வித்­தார்.

அந்த இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­கள் என்று உயர் நீதி­மன்­றம் 2020 ஜூன் மாதம் தீர்ப்­ப­ளித்­தது. மேல்­மு­றை­யீட்டை விசா­ரித்த நீதி­மன்­றம் நேற்று அந்த இரண்டு பேருக்கு எதி­ரான குற்­றத் தீர்ப்பை நிரா­க­ரித்து மேல்­மு­றை­யீ­டு­களை ஏற்­று இருவரை­யும் விடு­வித்­தது.