வேலை, கடன், வாடகை, இணையவழி காதல் போன்றவற்றின் தொடர்பில் நடந்துள்ள 746க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் சுமார் 300 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடிப் பேர்வழிகள் என்று நம்பப்படும் அந்த 295 பேரும் 16 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 199 ஆடவர்களும் 96 பெண்களும் அடங்குவர்.
மோசடிக்கு ஆளானவர்கள் $5.5 மில்லியனுக்கு மேல் இழந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏமாற்றுதல், பண மோசடி, உரிமம் இன்றி கட்டணச் சேவைகள் வழங்குதல் போன்றவற்றின் தொடர்பில் சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தக மின்னஞ்சல், அரசாங்க அதிகாரியாக ஆள்மாறாட்டம், இணைய வர்த்தகம், முதலீடு மற்றும் இதர மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை அமைந்துள்ளது.
வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் ஏழு காவல்துறை நிலப் பிரிவு அதிகாரிகளும் இம்மாதம் 14ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடையே மேற்கொண்ட இரு வார அமலாக்கச் சோதனை நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் சிக்கினர்.
"பொதுமக்கள் தங்களின் வங்கிக் கணக்கையோ தொடர்பு எண்ணையோ மற்றவர்கள் பயன்படுத்தக் கேட்கும்போது மறுத்துவிட வேண்டும். குற்றச்செயல்கள் தொடர்பில் இவை கண்டறியப்பட்டால் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும்," என்று காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

