குரங்கம்மை கொவிட்-19 போன்று பெருந்தொற்றாக மாறும் சாத்தியம் குறைவு என்றாலும் வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
"வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கம்மைச் சம்பவங்கள் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, நமது மக்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்கள். மேலும் நாம் ஓர் அனைத்துலக, வர்த்தக மையமாகத் திகழ்கிறோம்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் ஓங் பதிவிட்டிருந்தார்.
மேலும் உலகில் 20 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் குரங்கம்மை எதிர்கொள்வதற்குத் தேவையான நடைமுறைகளும் சுகாதார நடவடிக்கைகளும் நடப்பில் உள்ளன என்றும் அவர் சொன்னார். உலகச் சுகாதாரக் கூட்டத்தில் அண்மையில் கலந்துகொண்ட திரு ஓங் அதில் குரங்கம்மை பற்றி அதிகம் பேசப்பட்டது என்றார் அவர்.
கொரொனா கிருமியைப் போல குரங்கம்மை பலருக்குப் பரவக்கூடியதல்ல என்று விளக்கிய திரு ஓங் உடல்ரீதியாக மிக நெருக்கமாக இருப்பதன்மூலம் குரங்கம்மை தொற்றும் என்று அவர் தெரிவித்தார். முகத்தைத் தொடும் முன் கை கழுவுவது போன்ற தனிப்பட்ட பொது சுகாதாரத்தைப் பொதுமக்கள் எப்போதும் கடைப்பிடிப்பது சிறந்தது என்று அவர் அறிவுறுத்தினார்.

