முரசொலி
புதிய கோழி இறைச்சியை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வதற்காக இங்குள்ள பல ஈரச் சந்தைகளிலும் பேரங்காடிகளிலும் பயனீட்டாளர்கள் இந்த வாரத் தொடக்கத்தில் குவிந்தனர். அதனால் அங்குள்ள கோழி இறைச்சி விரைவில் விற்றுத் தீர்ந்தது.
ஜூன் 1 முதல் உள்நாட்டு விலை மற்றும் உற்பத்தி சீராகும்வரை மாதத்திற்கு 3.6 மில்லியன் கோழிகள் ஏற்றுமதியை நிறுத்துவதாக மலேசியா அறிவித்ததை அடுத்து, புதிய கோழி இறைச்சியின் தேவை அதிகரித்தது.
பிடோக், கிம் மோ, பீஷான், மெக்பர்சன் ஆகிய பகுதிகளில் உள்ள ஈரச் சந்தைகளில் புதிய கோழி இறைச்சி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள்ளாக விற்றுத் தீர்ந்துவிட்டது. வழக்கமாக அங்கு மூன்று, நான்கு மணி நேரம் கழித்துதான் அவ்வாறு நடக்கும்.
விற்றுத் தீர்ந்துவிடுமோ என்ற பதற்றம், மற்றவர்கள் தங்களை முந்திக்கொண்டு கோழி இறைச்சியை வாங்கி விடுவார்களோ என்ற அச்சம், புதிய கோழிகள் முடிந்துவிட்டால், உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியின் விலை உயர்ந்துவிடுமோ என்ற கவலை ஆகியவை மக்களிடம் அதிகம் காணப்படுகின்றன.
ஈரச் சந்தைகளில் விற்கப்படும் புதிய கோழி இறைச்சி, உடனே சமைத்து உண்ணுவதற்காக என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
அப்படி இருக்கையில், ஈரச் சந்தைகளில் புதிய கோழி இறைச்சியை வாங்கி வந்து, அதை குளிர்பதனப் பெட்டியில் அடுக்கி வைப்பது, அவசரப்பட்டு புதிய கோழி இறைச்சி வாங்குவதை அர்த்தமற்றதாகி விடுகிறது.
உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியின் சுவையைவிட புதிய கோழி இறைச்சியின் சுவை நன்றாக இருப்பதால், பலரும் அதை விரும்பி வாங்குகிறார்கள்.
அதிலும் பண்ணையில் வளர்க்கப்படும் கோழியை விட சுதந்திரமாக திரியும் கம்போங் சிக்கன் எனும் கிராமத்துக் கோழியின் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், உன்னிப்பாகக் கவனித்தால் இரு வகை கோழிகளுக்கும் உள்ள சுவையில் பெரிய மாற்றத்தை நாம் கண்டுவிட முடியாது.
அந்த இரு வகை இறைச்சியை நாம் எவ்வளவு விரைவாக சமைக்கிறோம் என்பதை பொறுத்தும் சுவை அமைந்துள்ளது.
எப்படி இருந்தாலும், புதிய கோழி இறைச்சியைத்தான் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். அதற்காக, புதிய கோழி இறைச்சி கிடைப்பதில் தற்காலிக தட்டுப்பாடு இருக்கும் என்ற அறிவிப்பு காரணமாக, பயனீட்டாளர்கள் பதற்றத்துடன் அதை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை.
மலேசியாவின் கோழி இறைச்சி ஏற்றுமதி தடை நிரந்தரமானது அல்ல.
தீவனத்தின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதன் காரணமாக, அதன் விலை அண்மையில் உயர்ந்துவிட்டதால், கடுமையான கோழிப் பற்றாக்குறை அங்கு ஏற்பட்டுள்ளது.
உக்ரேன் போர் ஓர் உலகளாவிய பொருளியல் நெருக்கடியாக உருவாகாதவரை, இந்த நிலைமைகள் தற்காலிகமானவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் குழுமம், தங்களிடம் உறைந்த கோழியின் கையிருப்பு இருப்பதாகவும் அது சுமார் நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இன்னும் இரண்டு மாதங்கள் தாக்குப்பிடிக்கக்கூடிய கோழி இறைச்சி விரைவில் சிங்கப்பூர் வந்து சேரவுள்ளது. ஆகவே, சிங்கப்பூரர்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த நீண்ட காலக் கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
சிங்கப்பூருக்குத் தேவையான உணவுப் பொருள்களில் 90 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை சிங்கப்பூர் உணவு அமைப்பு உறுதிப் படுத்தியுள்ளது. அந்த உணவுப் பொருள்கள், 170 நாடுகள் மற்றும் வட்டாரங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஒருவேளை, ஏதாவது ஒரு நாட்டில் இருந்து கிடைத்து வரும் பொருள்கள் வந்து சேர்வதற்கு இடையூறு ஏற்பட்டால், இறக்குமதியாளர்கள் இதர மாற்று வளங்களிலிருந்து பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
அதன் மூலம் உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கலாம். மேலும் உணவு விநியோகம் சீராகக் கிடைத்து வருவதையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
சிங்கப்பூர் போதிய உணவுப்பொருள் கிடைப்பதை உறுதிப்படுத்த கொள்முதல் வழிகளைப் பலமுனைப்படுத்துகிறது. இதுவே முக்கிய உத்தியாக வும் இருக்கிறது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள், தனது ஊட்டச்சத்துத் தேவைகளில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே தயாரிக்கும் '30க்கு 30' எனும் இலக்கை அடைய சிங்கப்பூர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையே, சிங்கப்பூரர்கள் கோழி இறைச்சி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள குறுகியகால பிரச்சினை களைச் சமாளிக்க தங்கள் உணவு விருப்பங்களைத் தற்காலிகமாக சரிசெய்து கொள்வது நல்லது.
எடுத்துக்காட்டாக, கோழி இறைச்சி போன்ற ஒரு பொருளின் பற்றாக்குறை தேவையற்ற பீதியை ஏற்படுத்தக்கூடாது.
சந்தைப் பொருள்களில் குறுகியகால ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கமானதுதான். அதுவே சிங்கப்பூரர்களின் பழக்கவழக்கங்களால், அது நம்மை பெரிதும் பாதிப்படைய செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது.

