மாதங்கி இளங்கோவன்
இளையர்களைக் கடல்துறையில் ஈர்ப்பதற்கு சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று 18 உயர்கல்வி நிலைய மாணவர்களை முதல் முறையாக சிங்கப்பூர் கடல்துறை இளையர் தூதர்களாக நியமித்தது.
இவ்விழா நேற்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையப் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"சிங்கப்பூர் கடல்துறைத் தூதர் திட்டத்தின் மூலம் கடல்துறையின் அடுத்த தலைமுறைத் திறனாளர்களை உருவாக்குகிறோம். அவர்கள் மற்ற இளையர்களுக்கு இத்துறையின் சிறப்புகளை எடுத்துக்கூறி, பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். புத்தாக்கமும் வெவ்வேறு தொழில்நுட்ப மாற்றங்களையும் காணும் கடல்துறையில் பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்டுள்ள மாணவர்களை வரவேற்பதன் மூலம் இத்துறையிலிருக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை நாம் பறைசாற்றுகிறோம்," என்று அவர் விவரித்தார்.
கடல்துறையில் தங்களது குடும்ப உறுப்பினர்களின் அனுபவம் காரணமாக, கடல்துறையில் அதிக ஆர்வம் காட்டும் இரு இளையர்களான கதிரவன் சுப்பரமணியம், கேஷமர்த்தினி யோகசுந்தரம், கடல்துறையில் வேலை செய்யும் வேட்கை யோடு இருப்பதால் சிங்கப்பூர் கடல்துறையின் இளம் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.
தமது அண்ணன் கடல்துறையில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்து வருவதை பார்த்து வளர்ந்த 24 வயது கதிரவனுக்கு சாதாரண அலுவலக வேலையில் ஈடுபட அவ்வளவு ஆர்வமில்லாத காரணத்தால் பரபரப்பான கப்பல்துறையில் வேலை தேட ஆர்வம் ஏற்பட்டது.
இவ்வாண்டு எஸ்ஜி ஆசியா ஹைட்ரோலிக்ஸ் நிறுவனத்தில் செய்த வேலைப் பயிற்சி பெற்றதன் கடல்துறையின் வெவ்வேறு அம்சங்களைப் புரிந்துகொண்டதோடு செய்முறைப் பயிற்சி அனுபவத்தையும் பெற்றார்.
கடல்துறையில் பணிபுரிபவர்களோடு உரையாடும்போதும் இணைந்து வேலை செய்யும்போதும் தேசிய சேவையின்போது கிடைத்த சகோதரத்துவ உணர்வைப் பெற்ற தாக கதிரவன் கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் இவர், கடல்துறையில் பணிபுரிவதற்கு 22 மாத உருமாற்றுப் பயிற்சியை மேற்கொண்ட பின்னர் இத்துறையில் கால்தடம் பதிக்க விரும்புகிறார்.
அவரைப்போல சிங்கப்பூர் தொழில்நுட்பப் கழகத்தில் பயிலும் 21 வயது கேஷமர்த்தினியும், தந்தை யின் கடல்சார் பொறியியல் அனுபவங்களைக் கேட்டுத் தாமும் இத்துறையில் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் வேலை செய்ய ஆர்வம் வந்தது என்றார்.
வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கும் கேஷமர்த்தினிக்கு இத்திட்டத்தின் வாயிலாக முக்கிய கடல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்பும் அமையலாம் என நம்புகிறார்.

