பள்ளி விடுமுறையில் பிள்ளைகளுக்குப் பொழுதுபோக உதவும் நடவடிக்கைகளுக்குப் பெற்றோர் அதிகம் செலவுசெய்யத் தேவையில்லை.
சிங்கப்பூரில் இலவசமாகவே பார்த்து மகிழக்கூடிய இடங்களுக்கும் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் பஞ்சமில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சில பெற்றோர் கூறினர்.
'சுங்கை பூலோ வெட்லேண்ட் ரிசர்வ்','லோவர் பியர்ஸ்' நீர்த்தேக்கப் பூங்கா, 'மெக்ரிட்சி' இயற்கை நடைபாதை, சிங்கப்பூர் பூமலை போன்ற பசுமையான இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.
கரையோரப் பூந்தோட்டத்தில் 'அரௌண்ட் த வேர்ல்ட் வித் கிஸ்டோபியா' எனும் கருப்பொருளில் உலகின் புகழ்பெற்ற இடங்கள் பலூன் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 19ஆம் தேதி வரை இவற்றை இலவசமாகக் காணலாம்.
சறுக்குப் பலகை போன்ற புதிய விளையாட்டுத் திறனைக் கற்றுக்கொடுக்கலாம். சிறுவர்களின் மீள்திறனுக்கு இது கைகொடுக்கும். ஆறு முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இலவசமாக ஒரு மணி நேரப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது சிங்கப்பூர் விளையாட்டு நடுவம்.
இலவச நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.
தீயணைப்பு நிலையங்கள் வாரம் ஒரு முறை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படவிருக்கின்றன. 18 தீயணைப்பு நிலையங்களில் சனிக்கிழமைகளில் காலை இரண்டு முறை இத்தகைய அனுமதி உண்டு. மேல் விவரங்களுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் இணையப் பக்கத்தை நாடலாம்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நாட்டில் உள்ள அரும்பொருளகங்கள், மரபுடைமை நிலையங்கள் ஆகியவற்றுக்கு இலவசமாகச் சென்று காணலாம்.
பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப பெற்றோர் திட்டமிட்டு இத்தகைய இடங்களுக்கு அழைத்துச் சென்று அதிக செலவின்றி பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பெற்றோர் சிலர் பகிர்ந்துகொண்டனர்.

