செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9e220fc2-9f05-40e2-ac7b-38cc2bd46f89
-

முடிதிருத்தும் சேவை, குளிர்சாதன பழுதுபார்ப்புக்கான தேவை அதிகரிப்பு

சிங்கப்பூரில் வெப்பநிலை அதிகரித்துள்ள வேளையில் தலைமுடியின் நீளத்தைக் குறைக்க முடிதிருத்தும் சேவையை நாடுவோர், குளிர்சாதனங்களைப் பழுதுபார்க்க விரும்புவோர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க ஆண், பெண் என இருபாலாருமே தலைமுடியின் நீளத்தைக் குறைக்கும்படி கேட்பதாக முடிதிருத்துநர்கள் கூறினர்.

இவ்வேளையில் குளிர்சாதனத்தை ஒரே நாளில் பழுதுபார்த்துத் தரும்படி வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து அவசர அழைப்புகள் வருவதாக பழுதுபார்ப்பு நிறுவனங்கள் கூறின. கடந்த மூன்று வாரங்களில் புதிய குளிர்சாதனங்களைப் பொருத்தும்படிக் கேட்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக அவை குறிப்பிட்டன.

'ஹெலிகாப்டர் பேரன்டிங் 2.0':

சிறந்த பிள்ளை வளர்ப்புமுறை

பிள்ளைகள்மீது அதீத கவனம் செலுத்தி அவர்கள் பள்ளி நடவடிக்கைகளில் சிறப்பாகச் செய்வதற்கும் தாங்களே பொறுப்பெடுத்துக்கொண்டு செயல்படும் பெற்றோரை விவரிக்கும் சொற்றொடர் 'ஹெலிகாப்டர் பேரன்ட்ஸ்'.

சிங்கப்பூரில் இத்தகைய பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக 2019ஆம் ஆண்டு அப்போதைய துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் எச்சரித்திருந்தார். பெற்றோரை இதற்காகக் குறைகூறாமல் அவர்கள் சில இலக்குகளை நிர்ணயித்து அதை எட்டும் வகையில் பிள்ளைகளைச் செயல்படத் தூண்டலாம் என்று அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

இது சிறந்த அணுகுமுறை என்கின்றனர் பெற்றோர் சிலர். பெற்றோரின் கவனிப்பு தொடர்ந்தாலும் பிள்ளைகள் சுயமாகச் சிந்தித்து செயல்படத் தேவையான அளவு சுதந்திரம் தரும் இந்நடைமுறையை 'ஹெலிகாட்பர் பேரன்டிங் 2.0' என்று குறிப்பிடலாம் என்று கூறும் இவர்கள், பிள்ளைகள் இலக்குகளை அடைவதற்கு ஆதரவு தருவதே நல்லது என்று சொல்கின்றனர்.