சாங்கி விமான நிலையத்தில் இரண்டாம் முனையத்தின் ஒரு பகுதி புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட முனையம் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் இருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் எஸ்கியூ327, நேற்று காலை மணி 7.12க்கு புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் முனையத்திற்கு முதலில் வந்திறங்கியது.
முனையத்தின் பரந்த வடிவமைப்பு, தானியக்க முறையிலான குடிநுழைவு நடைமுறைகள் ஆகியவற்றை இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் பெரிதும் வரவேற்றனர்.
விமான நிலைய ஊழியர்கள் தங்களை வரவேற்க தேநீரும், பிஸ்கெட்டுகளும் தந்ததாகப் பயணிகள் கூறினர்.
குடிநுழைவு நடைமுறை விரைவாக இடம்பெற்றதைப் பாராட்டிய சிலர் வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதற்குரிய கடைகள் மூடப்பட்டிருந்தது குறித்து வருத்தம் தெரிவித்தனர்.
தானியக்க முறையில் குடிநுழைவு நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய 34 தடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஏனைய 12 தடங்களில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பர் என்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
கண்விழிப் படலம், அங்க அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்ப முறைக்குப் பதிந்துகொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டினர் தானியக்க குடிநுழைவு நடைமுறையைப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் முனையத்தில் புதுப்பிப்புப் பணிகள் இன்னும் நடைபெறுவதால் பயணிகளை வரவேற்கக் காத்திருப்போருக்கு உணவு, பானக் கடைகள் இல்லாதது குறித்து சிலர் வருத்தம் தெரிவித்தனர். இம்முனையத்தில் புதுப்பிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

