கி. ஜனார்த்தனன்
பாடல் காணொளிகளைத் தயாரிப்பதற்குத் தேவை சில நிமிடங்களே. ஆனால் பாடக் கற்றுக்கொள்வதோ பல்லாண்டு உழைப்பு. இதற்கு சான்றாய் விளங்குகின்றனர் இரட்டைச் சகோதரர்களான 25 வயது ஸ்ரீராம் பாலா, கணேஷ் பாலா. சிங்கப்பூரில் பிறந்த இவர்கள், தங்களின் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.
கர்நாடக சங்கீதப் பாடல்களுடன் திரைப்படப்பாடல்களையும் பாடும் இவர்கள், ஒரு மாதம் முன்னதாகத்தான் தங்களின் இன்ஸ்டகிராம் பக்கத்தைத் தொடங்கினர். ஆனால் இன்று 143,000 பேர் அந்தப் பக்கத்தைப் பின்தொடர் கின்றனர். பின்தொடர்வோரில் திரையுலகப் பிரபலம் மாதவனும் ஒருவர்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் என் ஆர் பிரசாந்த், பூர்ண பிரக்ஞ ராவ், ஸ்ரீவித்யா ஸ்ரீராம் ஆகியோரிடம் பயின்ற பின்னர், புகழ்பெற்ற இசைக்கலைஞர் அபிஷேக் ரகுராமிடம் இணையக் காணொளி வழியாக ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டையர்கள் இசை கற்று வருகின்றனர். விடுமுறையில் இந்தியாவுக்கே சென்றும் அவரிடம் கற்கின்றனர்.
கர்நாடக இசையுடன் இந்துஸ்தானி இசை, பாலிவுட், ஜேஸ், ஹிப் ஹாப் உள்ளிட்ட இசை வகை
களையும் தாங்கள் ரசிப்பதாக இவர்கள் பகிர்ந்தனர்.
பயிற்சியைத் தொடர்ந்தவாறே புதிய உத்திகளைக் கையாண்டு தங்களின் ஆற்றலை மேம்படுத்தவும் சகோதரர்கள் முயன்று வருகின்றனர். சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியில் ஓராண்டு இசை, ஒலி தயாரிப்புத் துறையில் படித்தனர்.
அப்போது அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்திற்குத் தாங்கள் விண்ணப்பித்தபடி மானியம் கிடைத்ததால் பலதுறைப் பட்டப்படிப்பை நிறுத்தியதாகக் கூறினர்.
தேசிய சேவையை முடித்த பின்னர் இவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா சென்று, கடந்தாண்டு இறுதியில் தங்களது கல்வியை முடித்தனர்.
கிரேமி விருதைப் பெற்ற புகழ்பெற்ற தப்லா கலைஞர் ஸாக்கிர் ஹுசேனுடன் ஒரே மேடையில் பாடியது தங்களது கல்வி அனுபவத்தின்போது மறக்க முடியாத ஒன்று எனக் கூறினர் இரட்டையர்கள்.
மிருதங்கத்தைப் பொழுதுபோக்கிற்காக வாசிக்கும் தங்கள் தந்தையே, இசை மீதான ஆர்வத்தை வித்திட்டதாகச் சகோதரர்கள் கூறினர். இசைத்துறையில் படிக்க தம் மகன்கள் எடுத்த முடிவைத் தாம் வரவேற்றதாகக் கூறினார் திரு பால நாராயணன்.
"இவர்கள் படிக்க விரும்பும் துறையில் முதலில் இவர்களுக்குத் திறமை உள்ளதா என்பதே என் அக்கறை. திறமை இல்லையென்றால் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முன்னேற்றம் இருக்காது," என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தப்போகும் இவர்கள், மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஆசைப்படுகின்றனர். இசைக்
கலைஞர்களின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பளிக்கும் இடமாக சிங்கப்பூர் இருப்பதாகக் கூறுகிறார்கள் இந்த இசை ஆர்வலர்கள்.