புக்கிட் பாஞ்சாங் இலகுரயில் சேவைக்கான புதிய ரயில்கள் 19ல் முதலாவது (படம்) சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ளது.
தற்போது நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த ரயிலைச் சோதித்து வருகிறது.
சோதனை நிறைவடைந்து ரயில் சேவையில் இணைக்கப்படுவதற்கு மூன்று முதல் ஆறு மாத காலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ரயில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் சேவையாற்றத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது ரயில் அடுத்த மாதம் வந்துசேரும் என்று கூறிய ஆணையம் எஞ்சிய ரயில்கள் அனைத்தும் அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூர் வந்தடையும் என்று குறிப்பிட்டது. ஃபிரான்சைச் சேர்ந்த 'அல்ஸ்டாம்' நிறுவனம் இந்த ரயில்களைச் சீனாவில் தயாரிக்கிறது.
மொத்தம் 14 நிலையங்களைக் கொண்ட இலகுரயில் பாதையில் சீரமைப்புப் பணிகளின் ஓர் அங்கமாகப் புதிய ரயில்கள் வாங்கப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகளுக்கு 344 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என்று ஆணையம் தெரிவித்தது.
புதிய ரயில்களில் அதிகக் காற்றோட்டத்துக்கு வகைசெய்யும் குளிர்சாதன வசதியுடன், 'எல்ஈடி' விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன. ஏற்கெனவே சேவையில் உள்ள 13 ரயில்களுடன் இணைந்து இவை சேவை வழங்கும்.
இவ்வேளையில் பழைய ரயில்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
ஏற்கெனவே பழைய ரயில்களில் இரண்டு புதுப்பிப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது. புக்கிட் பாஞ்சாங் இலகுரயில் சேவையைக் கடந்த 23 ஆண்டுகளாக 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் நடத்திவருகிறது.

