2022 முதல் காலாண்டில் அதிகரித்த கணினி விற்பனை
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறந்துள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கணினிகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உலகெங்கும் இதற்கு மாறாக தேவை குறைந்துள்ளது. சென்ற ஆண்டும் இங்கு கணினி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப் பட்டது. 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூர் 79,000 கணினிகளை இறக்குமதி செய்தது. இதற்கு முந்தைய காலாண்டைவிட இது 28 விழுக்காடு அதிகம். ஆனால் உலகளவில் கணினி இறக்குமதி 2022ன் முதல் காலாண்டில் ஏறக்குறைய 10 விழுக்காடு சரிந்ததாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் வழக்கமான கணினிகளைவிட 'நோட்புக்' ரகச் சிறிய கணினிகள்தான் அதிகம் விற்பனையாகும். ஆனால் 2022ன் முதல் காலாண்டில் 472,000 'நோட்புக்' ரகக் கணினிகளே இறக்குமதி செய்யப்பட்டன. முந்தைய காலாண்டைவிட அது 10% குறைவு. உலக அளவிலும் 'நோட்புக்' இறக்குமதி 13% குறைந்தது.
ஈராண்டுக்குப் பிறகு இடம்பெறும் சிங்கப்பூர் புத்தகக் கண்காட்சி
புத்தகப் பிரியர்கள் அடுத்த மாதம் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சிங்கப்பூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று விரும்பிய புத்தகங்களை வாங்கலாம். விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகக் கட்டடம், அதன் அருகில் அமைந்திருக்கும் 'பிரஸ் பாஸா காம்ப்ளெக்ஸ்' இரண்டிலும் இந்தக் கண்காட்சி இடம்பெறும்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த வருடாந்தர நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை ஏறத்தாழ 15 சில்லறை விற்பனைக் கடை களும் பதிப்பகங்களும் இதில் கலந்துகொள்கின்றன.. நூல் வெளியீடுகள், உள்ளூர், வெளிநாட்டு எழுத்தாளர்களின் உரைகள், பயிலரங்குகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் கண்காட்சியின் தொடக்கவிழாவில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவும் தகவல் , தொடர்பு அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் ரஹயு மஸாமும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

