சிங்கப்பூரில் சென்ற ஆண்டு அனைத்துத் துறைகளிலும் சம்பள உயர்வு பதிவானாலும் குறிப்பாக ஆறு துறைகளில் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பிருந்ததைவிடவும் அதிகமான விகிதத்தில் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
சில்லறை விற்பனை, தொழில்முறைச் சேவை, தகவல் தொடர்பு, மொத்த விற்பனை, உற்பத்தி, கட்டுமானம் ஆகியவை அந்தத் துறைகள் என்று அது கூறியது.
தகவல் தொடர்பு, நிதிச் சேவை, உற்பத்தி போன்ற துறைகளில் கிருமிப் பரவலின்போதுகூட வலுவான சம்பள உயர்வு பதிவானதாகவும் இந்த நிலை 2021லும் தொடர்ந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
தகவல் தொடர்புத் துறைக்கான சென்ற ஆண்டின் சம்பள உயர்வு 5.1 விழுக்காடு என்று கூறப்பட்டது.
சில்லறை விற்பனைத் துறையில் காணப்பட்ட சம்பள உயர்வு 5.5 விழுக்காடு.
இந்தத் துறையில் மேலாளர் அல்லது நிர்வாகிகள் அல்லாதோரின் சம்பளங்கள் 6.3 விழுக்காடு வரை உயர்ந்தன.
கிருமிப்பரவல் காலகட்டத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில்கூட எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு ஆள்பற்றாக்குறை நிலவுவதால் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
உதாரணத்திற்கு ஹோட்டல் துறையில் 2020ல் ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமாகச் சம்பளக் குறைப்பு இடம்பெற்றது; ஆனால் தற்போது அதில் 1.7 விழுக்காடு வரை ஊழியர்க்கான சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட அண்மைய பாதிப்புகளால் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும்; இதனால் சம்பள உயர்வு பாதிக்கப்படும் என மனிதவள அமைச்சு எச்சரித்தது
சிங்கப்பூரின் பொருளியல் சென்ற ஆண்டு 7.6 விழுக்காடு வளர்ச்சிகண்ட நிலையில் இங்குள்ள முக்கால்வாசிக்கும் அதிகமான நிறுவனங்கள் லாபம் ஈட்டியதாகத் தெரியவந்துள்ளது.
கிருமிப்பரவலுக்கு இடையிலும் ஐந்து ஆண்டில் இல்லாத அளவு இந்நிறுவனங்கள் லாபம் ஈட்டியதாகக் கூறப்பட்டது.

