மின்சார வாகனங்களுக்குப் பழுதுபார்ப்பு, பராமரிப்புச் சேவை வழங்கும் தொழில்நுட்பர்களுக்கான தேசிய அளவிலான சான்றிதழ் திட்டம் இந்த ஆண்டின் பிற்பாதியில் தொடங்கவிருக்கிறது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இந்த முயற்சி குறித்து போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று அறிவித்தார்.
உயர் மின்சக்திக் கட்டமைப்பு பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் உரிய பயிற்சியை வழங்குவதன் தொடர்பில் ஆணையம் 21 அமைப்புகளுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உயர்கல்வி நிலையங்கள், பங்காளித்துவ அமைப்புகள், பயிற்றுவிப்பாளர்கள், வாகனத் துறை சார்ந்த நிறுவனங்கள் போன்றவை இவற்றில் அடங்கும். இவை தொழில்நுட்பர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதுடன் சான்றிதழ்களையும் வழங்கும்.
வேலைக்கு முன்பாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் மாணவர்கள், தொடர் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் பங்குபெறும் தொழில்முறைப் பணியாளர்கள் என இருதரப்பினருக்கும் இது பொருந்தும்.
பயிற்சி பெறுவோர் 'ஸ்கில்ஸ்ஃப்யூச்சர் சிங்கப்பூர்', சிங்கப்பூர் ஊழியரணி போன்ற அரசாங்க அமைப்புகளிடமிருந்து ஆதரவு பெற வகைசெய்யப்படும். தகுதிபெறும் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் பயிற்சிக் காலத்தில் சம்பள ஆதரவும் வழங்கப்படும்.
இதுதொடர்பான கையெழுத்து நிகழ்ச்சி நேற்று சுவா சூ காங்கில் உள்ள 'ஐடிஇ காலேஜ் வெஸ்ட்டில்' நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஈஸ்வரன், நாட்டில் மின்வாகனங்களே அதிகம் என்ற நிலையை எட்ட அதிக நாள் ஆகும் என்றாலும் இப்போதிருந்தே அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதுடன் நீண்டகாலத் திட்டமிடலும் அவசியம் என்றார்.

