அனுமதி இல்லாது குறுகிய காலத்துக்கு வீடுகளை வாடகைக்கு விட ஏற்பாடு செய்த குற்றங்களுக்காக முன்னாள் சொத்து முகவருக்கு $1,158,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு இதற்கு முன்பு இவ்வளவு பெரிய தொகை விதிக்கப்பட்டதில்லை.
Airbnb, HomeAway போன்ற தளங்கள் மூலம் உள்ளூர்வாசி
களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் 14 தனியார் குடியிருப்புகளை குறுகிய காலத்துக்கு சைமன் சான் சாய் வான் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்த 43 வயது சாவ் ஜிங்கிற்கு $84,000 அபராதம் விதிக்கப்பட்டது. இன்டர்நேஷனல் பிளாசா, ராபின்சன் சுவீட்ஸ், கிளேர்மோண்ட், செண்டர்பாயிண்ட் அபார்ட்மெண்ட்ஸ், தி அபோட் எட் டெவன்ஷியர், கெரீபியன் எட் கெப்பல் பே உட்பட மொத்தம் 14 குடியிருப்புகளில் உள்ள தனியார் வீடுகளை சான் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டார். குற்றங்கள் நிகழ்ந்தபோது தம்பதிகளான சாவ்வும் சானும் உரிமம் உள்ள சொத்து முகவர்
களாக இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
எச்டிஎம் சொலூஷன்ஸ், எச்டிஎம் நிர்வாகம் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்களாகவும் சாவ்வும் சானும் இருந்தனர். எஸ்என்எஸ் இன்ஃபோடெக் குளோபல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராகவும் சான் இருந்தார்.
சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுடன் இந்த மூன்று நிறுவனங்களையும் பயன்படுத்தி சான் ஒப்பந்தம் செய்துகொண்டார். பிறகு அந்த வீடுகளை அவர் குறுகிய காலகட்டத்துக்கு வாடகைக்கு விட்டார்.
இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும்படி சாவ்வை சான் வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு வீடுகளை சடப்டவிரோதமாக வாடகைக்கு விட சானுக்கு சாவ் உதவினார்.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதியிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த சட்டவிரோத வாடகை மூலம் சான் மொத்தம் $1,254,907.78 வருமானம் ஈட்டினார்.
தமக்கு உதவிய சாவ்வுக்கு சான் மாதச் சம்பளமாக $4,000 கொடுத்தார். சானிடமிருந்து சாவ் மொத்தம் $52,000 பெற்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தனியார் வீடுகளை வாடகைக்கு விட அவற்றின் உரிமையாளர்கள் முடிவெடுத்தால் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.
வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் அதைச் சட்டவிரோதமான காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதை வீட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
"தனியார் வீடுகளைக் குறுகிய காலகட்டத்துக்கு வாடகைக்கு விட அனுமதி இல்லை. அவ்வாறு செய்தால் அந்தக் குடியிருப்பில் நிலவும் சூழலை அது மாற்றிவிடும். அதுமட்டுமல்லாது, அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போருக்கு அசௌகரியத்தை அது ஏற்படுத்தக்கூடும்," என்று ஆணையம் தெரிவித்தது.

