பணிப்பெண்ணைத் தொடர்ந்து பலமுறை துன்புறுத்திய பெண்ணுக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 35 வயது சாவ் லின் தமது மகன் கண் முன்னே மியன்மாரைச் சேர்ந்த தமது பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அக்குற்றங்களை சாவ் புரிந்தபோது அவர் தாதியாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
பணிப்பெண்ணைத் துன்புறுத்தியது மட்டுமல்லாது, அவர் ஒவ்வொரு முறையும் ஏதேனும் தவறு செய்தால் அதற்குத் தண்டனை தரும் வகையில் சம்பளத்தை சாவ் குறைத்தார்.
அவரது பணிப்பெண்ணின் மாதச் சம்பளம் $500 என்றும் அதை அவர் $200க்குக் குறைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
துன்புறுத்தல் குற்றங்களை சாவ் ஒப்புக்கொண்ணார். ஒருமுறை அவர் அப்பெண்ணின் முகத்தில் தொடர்ச்சியாகப் பத்து முறை அறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பணிப்பெண்ணை அவர் மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமக்கு இழைக்கப்படும் இன்னல்களை சகித்துக்கொள்ள முடியாமல் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு புகார் செய்தார் அப்பணிப்பெண்.
அதனைத் தொடர்ந்து சாவ்வின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தனர்.
பாதிக்கப்பட்ட பணிப்பெண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவருக்கு நெற்றியிலும் மற்ற உடற்பகுதிகளிலும் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
சாவ் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று அவர் தமது சிறைத் தண்டனையைத் தொடங்குவார்.

