கிரிப்டோ நாணயம், என்எஃப்டி போன்ற மின்னிலக்க நிதி அம்சங் கள் தொடர்ந்து உருவாகின்றன. மிகவும் ஆபத்தானவையாக இவை தோன்றினாலும் வருங்கால நிதி முறையை உருமாற்றக்கூடியவை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ சொத்துகளால் ஏற்படும் பெரிய ஆபத்துகளைச் சமாளிக்க சிங்கப்பூர் அதன் சட்ட
விதிகளை மாற்றி அமைத்தபோதிலும் சிறு முதலீட்டாளர்கள் மின்னிலக்க நாணயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
"குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் மின்னிலக்க நாணங்களி
லிருந்து தள்ளி இருக்க வேண்டும். நாம் இதற்கு மேல் இதனை வலியுறுத்த இயலாது," என்றார் திரு ஹெங்.
இரண்டாவது ஆசிய தொழில்நுட்பத்தின் சிங்கப்பூர் உச்சநிலைக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். மரினா பேயில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
"வேகமான வளர்ச்சி, அதிக லாபம் போன்றவற்றால் கிரிப்டோ சொத்துகள் அதிகமானோரைக் கவர்ந்து வருகின்றன. ஆனால், அண்மையில் 'டெரா லூனா' நாணய வீழ்ச்சியால் ஏராளமான முதலீட்டாளர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். அத்துடன் பிட்காயினிலும் இதர மின்னிலக்க நாணயங்களிலும் மறைமுக எதிர்விளைவுகளை அது ஏற்படுத்தியது.
"இருப்பினும், புத்தாக்கத்திற்கான பாதையில் விதிமுறைகள் சரிவர இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்யும் வகையில் விதி மாற்றத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து ஈடுபடும்," என்று தெரிவித்தார் துணைப் பிரதமர்.
"கிரிப்டோ சொத்துகள் என்பது வளர்ந்து வரும் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களின் புதிய அலையின் ஒரு பகுதி. அதனை 'வெப் 3.0' என்றுகூட அறியலாம். திறந்த மனதுடன் இதனை அணுகலாம்.
"உருமாற்றத்திற்கான அடிப்படை தொழில்நுட்பங்களுக்கானவை இவை என்பதைப் புரிந்துகொள்ள சந்தேகத் திரைகளை நாம் விலக்க வேண்டி இருக்கும்.
"புத்தாக்கத்தை ஏற்படுத்தவும் மின்னிலக்க நாணயத் துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் 'பிளாக்செயின்' மற்றும் மின்னிலக்கச் சொத்து வணிகர்களுடன் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்," என்றார் பொருளியல் கொள்கை
களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்.
கடந்த ஈராண்டுகளில் 'பேக்ஸோஸ்' போன்ற 11 மின்னிலக்கப் பணம் செலுத்தும் டோக்கன் நடத்துநர்களுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் உரிமம் வழங்கியது. இருப்பினும் மின்னிலக்க நாணயங்களில் வணிகம் செய்வதற்கு எதிராக ஆணையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
மின்னிலக்க நாணயங்களைத் தவிர்க்க சிறு முதலீட்டாளர்களுக்கு வேண்டுகோள்

