அமெரிக்கா, கனடாவுக்கு வெளியே அமைந்துள்ள முதல் 'சைல்ட்கைன்' மருத்துவமனை என்னும் அனைத்துலக அங்கீகாரம் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது.
இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள குழந்தை வலி நிர்வாக மருந்தகம் இந்தச் சிறப்புக்குக் காரணம்.
வலியைச் சமாளித்து வாழ்வது எப்படி என்பதை இந்த மருந்தகம் கற்றுத் தருகிறது.
நாள்பட்ட வலியுடன் உள்ள பல்வேறு குழந்தைகளை இந்த மருந்தகம் கையாண்டுள்ளது. அவர்களில் ஒருவர் இங் சியூ டிங். 15 வயதாக இருந்தபோது இச்சிறுமிக்கு இடுப்பை ஒட்டிய பகுதியில் வலி இருந்தது.
அவரால் உட்காரவோ நிற்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் பல வாரங்கள் அவரால் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. வலிக்கான காரணத்தைக் கண்டறிய சிரமப்பட்ட மருத்துவர்கள் அவரை இந்த மருந்தகத்துக்குப் பரிந்துரைத்தனர்.
தற்போது 21 வயதாகும் திருவாட்டி இங், "வலியும் நானும் சேர்ந்து வாழப் பழகிக்கொண்டோம். இது என் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும்," என்கிறார் அவர்.
குழந்தைகளின் நாள்பட்ட வலியை நிர்வகிக்க உதவுவதற்காகவும் வலி தொடர்பான விழிப்புணர்வை வளர்ப்பதற்காகவும் சைல்ட்கைன் இண்டர்நேஷனல் அமைப்பு இந்த மருந்தகத்திற்குச் சான்றிதழ் வழங்கி உள்ளது.
பாஸ்டன் குழந்தை மருத்துவமனை போன்ற வடஅமெரிக்காவின் புகழ்பெற்ற 11 குழந்தை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுடன் கேகே மருத்துவமனையும் இணைகிறது.
"நாள்பட்ட வலி என்பது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. குணமாவதற்கு எதிர்பார்க்கப்படும் காலத்தையும் தாண்டி வலி நீடிக்கக்கூடும்," என்று கேகே மருத்துவமனையின் குழந்தைகள் உணர்விழப்புத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் செரின் லிம் கூறினார்.
"பிறக்கும் குழந்தைகளும் வலியால் பாதிக்கப்படுவதுண்டு. உரிய நேரத்தில் அதனைக் கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் மனரீதியான, உணர்வு ரீதியான நீண்டகாலப் பிரச்சினைகள் ஏற்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.

