ஒவ்வொரு தலைமுறையும் முன்னோடித் தலைமுறையினராகத் திகழ வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய தொடக்கக் கல்லூரியில் நேற்றுக் காலை நடைபெற்ற புகுமுக வகுப்புக் கருத்தரங்கில் பங்கேற்று 550 புகுமுக வகுப்பு மாணவர்களிடையே திரு சான் உரையாற்றினார்.
"சிங்கப்பூரின் 100வது ஆண்டு விழாவுக்கு வழிநடத்திச் செல்லக்கூடிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது.
"நம்பிக்கை, ஆர்வம், தலை
முறைத் தொடர்பு போன்ற நற்பண்பு கள் மூலம் மாணவர்கள் வெற்றி நடை போட வேண்டும்.
"நமக்கு முந்திய தலைமுறையினர் உலகப் பொருளியல் மந்தம், எண்ணெய் நெருக்கடி போன்ற சவால்களைக் கடந்து வந்துள்ளார்கள். அதனை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றைய இளையர்கள் தனித்துச் சிறந்தோங்க வேண்டும்.
"காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பின்னர் வளர்ச்சி காணத் தொடங்கிய இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு இடையில் ஆயுதப் பூசல் நிலவிய காலம் கோன்ஃபிராண்டாசி என்பதாகும்.
"இதுபோன்ற நெருக்கடி மற்றும் சவால்களை எதிர்நோக்கியதன் விளைவாக சிங்கப்பூரர்களின் வலிமை கூடியது.
"இளைய தலைமுறை 2020ஐ கடந்து எஸ்ஜி100 என்பதை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டும்," என்றார் அமைச்சர் சான்.
சிங்கப்பூரின் இன்றைய இளையர்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகள் குறித்தும் திரு சான் விளக்கினார்.
போட்டி நிறைந்த புவிசார் அரசியல் சூழல், பொருளியல் உருமாற்றம், உலகளாவிய மின்னிலக்க முனையாக சிங்கப்பூரை நிலை
நிறுத்துதல் போன்றவற்றைக் கடந்து இளையர்கள் வரவேண்டும் என்றார் அவர்.
உலகத்துடனும் இந்த வட்டாரத்துடனும் மாணவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, இதர புகுமுகக் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று புக்கிட் தீமாவில் உள்ள இரண்டு உரை அரங்குகளில் திரண்டிருந்தனர்.
வருடாந்திரக் கருத்தரங்கிலும் அவர்கள் பங்கேற்றனர்.

