பூகிஸ் எம்ஆர்டி நிலையத்தில் சோதனைக்காக கூடுதல் நேரம்
பொதுப் போக்குவரத்து அவசர ஆயத்தநிலை பயிற்சி ஜூன் 6ஆம் தேதி பூகிஸ் எம்ஆர்டி நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சி நடவடிக்கையின்போது பயணிகள் 'மெட்டல் டிடெக்டர்' என்னும் உலோகம் கண்டறியும் வாயிலைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அத்துடன் அவர்களின் உடைமைகள் எக்ஸ்-ரே இயந்திரங்கள் மூலம் சோதிக்கப்படும். பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக இது இடம்பெறுகிறது. சிங்கப்பூர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவும் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட வேண்டி இருப்பதால் பூகிஸ் எம்ஆர்டி நிலையத்தில் பயணிகளுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படலாம் என்று நிலப்போக்குவரத்து ஆணையமும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட், எஸ்எம்ஆர்டி ஆகிய பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் நேற்று கூட்டாகத் தெரிவித்தன.
கட்டட உச்சியிலிருந்து கீேழ விழுந்த ஊழியர் மாண்டார்
பங்ளாதேஷைச் சேர்ந்த 37 வயது ஊழியர் 20 மீட்டர் உயரத்திலிருந்து கீேழ விழுந்தார். இச்சம்பவம் மே 24ஆம் தேதி காலை 10.45 மணியளவில் 16 வெஸ்ட் கோஸ்ட் கிரெசன்ட்டில் நடைபெற்றது. அங்குள்ள கன்டோமினிய வீடு ஒன்றின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்தபோது கீழே விழுந்த அந்த ஊழியர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் உயிர்பிழைக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் மனிதவள அமைச்சு கூறியது. சம்பவம் பற்றி விசாரணை நடத்திய அமைச்சு, உயரே இருந்து செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மே 6ஆம் தேதி வரை 20 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன. இவற்றில் 10 உயிரிழப்புகள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை. இதுபோன்று வேையிடங்களில் மரணம் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று பிரதமர் லீ சியன் லூங் மே 9ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சுகாதாரப் பராமரிப்பில் கொவிட்-19 ஏற்படுத்திய தொழில்நுட்ப மாற்றம்
சுகாதாரப் பராமரிப்பில் தொழில்நுட்ப மாற்றத்தைத் தூண்டி விட கொவிட்-19 கொள்ளைநோய் முக்கிய பங்காற்றியது. அந்தத் துறையில் மின்னிலக்கத் தீர்வுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்த சமூகம் முயலவேண்டும் என்று நிபுணர் குழு ஒன்று ஆலோசனை தெரிவித்துள்ளது. இதற்கு, இதர எல்லா வற்றையும்விட நம்பிக்கை மிகவும் முக்கியம் என்றும் அது கூறியது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், டாக்டர் எனிவேர் அமைப்பின் தலைமை நிதி அலுவலர் எட்வின் பாசுகி, சீனாவின் நிதிச் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த ஜெசிக்கா டான் ஆகியோரை உள்ளடக்கியது இந்தக் குழு.
"கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னர் சாதிக்க முடியாத பல அம்சங்களை இப்போது நிறைவேற்ற முடி கிறது. இதற்கு மின்னிலக்கக் கருவிகள் முக்கிய காரணம்," என்று திரு ஓங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தோனீசிய அமைச்சர்
இந்தோனீசியாவின் பொருளியல் விவகார ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹார்டார்டோ சிங்கப்பூர் வருைக மேற்கொண்டுள்ளார். இங்கு இருக்கும்போது பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்கு
வரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோரைச் சந்திக்கவும் இங்கு நடைபெறும் ஆசிய தொழில்நுட்ப உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாக சிங்கப்பூர் வெளி
யுறவு அமைச்சு தெரிவித்தது.

