கொவிட்-19 பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள சிங்கப்பூரர்களுக்கான கொவிட்-19 நிவாரண நிதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாழ்க்கைச் செலவினமும் பணவீக்கமும் அதிகரித்துவரும் நிலையில், கூடுதலானோருக்கு இந்த நிதி கைகொடுக்கும்.
கோங் மெங் சான்-சமூக மேம்பாட்டு மன்றம் கொவிட்-19 நிவாரண நிதி 2020ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் 2023 மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பக்காலம் முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைய இருந்தது.
இந்த நிதி நீட்டிக்கப்படுவதன் பொருட்டு, அதற்குத் தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் $800 வழங்கப்படும். முன்னதாக, இந்தத் தொகை $500ஆக இருந்தது.
இங்குள்ள ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களும் பௌத்த ஆலயமான கோங் மெங் சான் போர் கார்க் சீ மடாலயமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், நிதி நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியது.
இந்த நிதிக்கு ஆலயம் $2 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. அந்த நன்கொடைக்கு ஈடாக சமூக மேம்பாட்டு மன்றங்களும் $2 மில்லியனை வழங்கியுள்ளன. ஆக மொத்தம், இந்த நிதிக்கு $4 மில்லியன் கிடைத்துள்ளது.
பிரைட் ஹில் டிரைவில் அமைந்துள்ள அந்த மடாலயத்திலோ எந்தவொரு சமூக மன்றத்திலோ இந்த நிதிக்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள், அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களின் இணையப் பக்கத்திலும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து அவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த நிதிக்குத் தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருக்கவேண்டும். விண்ணப்பம் செய்யும் தருணத்தில், குறைந்தது இரு மாதங்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பில் சென்றதால் வருமான இழப்பை எதிர்நோக்கியவராகவோ ஆட்குறைப்புக்கு ஆளானவராகவோ பணிநீக்கம் செய்யப்பட்டவராகவோ இருக்கவேண்டும்.
மாதச் சம்பளமாக $3,000 அல்லது அதற்குக் குறைவாக பெறுவோர், குறைந்தது 30 விழுக்காடு வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிட்டாலும் இந்த நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.
சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்ள சமூக மேம்பாட்டு மன்றங்கள் நல்ல நிலையில் இருப்பதாக மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா சொன்னார்.

