புக்கிட் பாத்தோக் பேருந்து நிலையத்தில் தாம் ஓட்டிய பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதி 14 பேருக்குக் காயம் விளைவித்த டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுநருக்கு நேற்று ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான லூ எங் சாய், 66 (படம்), ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதால் ஆறு பேருக்குக் கடுமையான காயம் ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
கடுமையாக காயமுற்றவர்களில் மற்றொரு பேருந்து ஓட்டுநரான திரு முகம்மது சாலே மியான், 65, என்பவரும் திரு அலியாஸ் மோக்சன், 57, என்பவரும் அடங்குவர். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது திரு அலியாஸ் பேருந்து நிலையத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
கவனக்குறைவாக செயல்பட்டு, திரு சாலே ஓட்டிய பேருந்தில் இருந்த எட்டுப் பயணிகளுக்குக் காயம் விளைவித்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் லூவுக்குத் தண்டனை விதிப்பதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
2000ஆம் ஆண்டிலிருந்து பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்த லூ, எதிரே வாகனங்கள் வருகின்றனவா என்பதைச் சரிபார்க்காமல் பேருந்தை வலதுபுறம் திருப்பியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சீ ஈ லிங் நேற்று நீதிமன்றத்தில் கூறினார்.
திரு சாலே ஓட்டிய பேருந்தின் வலதுபக்கத்தில் லூ பேருந்தை மோதினார். இந்த விபத்து காரணமாக திரு சாலேயின் பேருந்து பக்கவாட்டில் சாய்ந்தது.
திரு சாலேயின் பேருந்தில் இருந்த 13 பேர் உட்பட விபத்தில் காயமுற்ற 14 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் லூவை வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை. தற்போது தாம் துப்புரவாளராகப் பணியாற்றுவதாகவும் ஜோகூர் பாருவில் வசிக்கும் தம் குடும்பத்தாருக்கு ஆதரவளிக்க வேண்டியிருப்பதாகவும் லூ கூறினார்.
பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து லூ நீக்கப்பட்டதாக டவர் டிரான்சிட் நிறுவனம் முன்னதாகக் கூறியிருந்தது.

