தட்சிணாமூர்த்தி வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம்

தட்சிணாமூர்த்தி வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம்

2 mins read
fdd2a23f-1080-4827-9177-62db35dd51d3
-

போதைப்­பொ­ருள் கடத்­திய வழக்­கில் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கும் மலே­சி­ய­ரான 36 வயது தட்­சி­ணா­மூர்த்தி காத்­தை­யா­வுக்கு ஏப்­ரல் 29ஆம் தேதி தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருந்த ஒரு நாளுக்கு முன்பு அதை ஒத்­தி­வைக்க தான் எடுத்த முடிவு குறித்து மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று முன்­தி­னம் விளக்கம் அளித்­தது.

சிறைக் கைதி­க­ளுக்­குள் பகிர்ந்து­கொள்­ளப்­பட்ட தனிப்­பட்ட கடி­தங்­க­ளைச் சிறை அதி­கா­ரி­கள் அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அதிகாரி அலு­வ­ல­கத்­திற்கு அனுப்­பி­யதை எதிர்த்து தட்­சி­ணா­மூர்த்தி­யும் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கும் 12 சிறைக் கைதி­களும் மனு அளித்­துள்­ள­னர்.

அந்த மனு நிலு­வை­யில் உள்ள வேளை­யில், தமக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தன் தொடர்­பி­லான நீதித்­துறை நடை­மு­றையை மறு­ஆய்வு செய்­யு­மாறு தட்­சி­ணா­மூர்த்தி கோரி­னார். தமக்கு மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தேதி குறிக்­கப்­பட்­ட­தால், தண்­டனையை எதிர்­நோக்­கும் 12 சிறைக் கைதி­க­ளை­விட தாம் மாறு­பட்ட முறையில் நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் வாதிட்­டார்.

நீதித்­துறை நடை­முறை மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­து குறித்த முடிவு வெளி­வ­ரும்­வரை தட்­சி­ணா­மூர்த்­திக்கு மரண தண்­ட­னை நிறை­வேற்­றப்படுவதை ஒத்­தி­வைக்­கு­மாறு ஏப்­ரல் 28ஆம் தேதி காலை உயர் நீதி­மன்ற நீதி­பதி ஹூ ஷியூ பெங் உத்­த­ர­விட்­டார்.

அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அதிகாரி அலு­வ­ல­கம் அளித்த மனுவை விசா­ரித்த மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்ற அமர்வு, அதைத் தள்­ளு­படி செய்­தது. அதைத் தொடர்ந்து, தட்­சி­ணா­மூர்த்­திக்கு மரண தண்­ட­னையை ஒத்தி­வைப்­ப­தற்­கான முடிவு அதே நாள் பிற்­ப­கல் நிலை­நி­றுத்­தப்­பட்­டது.

இதன் தொடர்­பில் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட எழுத்­து­பூர்வ அறிக்­கை­யில், இந்த சிவில் வழக்­கில் தமது ஈடு­பாடு தேவை என்­பதை தட்­சி­ணா­மூர்த்தி காண்­பித்­துள்­ள­தா­கக் கூறி­யது.

44.96 கிராம் ஹெரா­யின் போதைப்­பொ­ரு­ளைக் கடத்­தி­ய­தாக 2015ல் தட்­சி­ணா­மூர்த்­திக்கு எதி­ராக குற்­றம் நிரூ­ப­ண­மா­னது. மரண தண்­ட­னையை எதிர்த்து 2016ல் அவர் செய்­தி­ருந்த மேல்­மு­றை­யீடு தள்­ளு­படி செய்­யப்­பட்­டி­ருந்­தது.