சாலைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் சாலைப் பாதுகாப்பு பதாகைகள் வைக்கப்படும்.
சாலை விபத்துகளின்போது ஏற்பட்ட விளைவுகளைக் காட்டும் பதாகைகளும் சாலைகள் வழியாக உள்ள விளக்குக் கம்பங்களில் வைக்கப்படும்.
'சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதம் 2022' இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியின்போது சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும் போக்குவரத்துக் காவல்துறையும் நேற்று அறிவித்த சில திட்டங்களில் இவை அடங்கும்.
பாய லேபாரில் உள்ள போக்குவரத்துக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம், காலவோட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள சாலைகள் பாதுகாப்பானதாக இருந்து வருவதாகச் சொன்னார்.
"2010ல் சாலை விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர். 2019ல் இந்த எண்ணிக்கை 118ஆக பதிவானது," என்று அவர் சொன்னார்.
"கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி 107 பேர் உயிர் இழந்தனர். கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் கட்டுப்பாடுகள் காரணமாக சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்தது இதற்கான காரணங்களில் அடங்கும். என்றபோதிலும், சாலைப் பாதுகாப்பில் நிலவும் போக்கு நம்பிக்கை அளிக்கிறது. சாலைப் பாதுகாப்பில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலன் தந்துள்ளதை அது காட்டுகிறது," என்றார் அவர்.
சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்களாக தொண்டூழியம் புரிய விரும்பும் பொதுமக்களுக்கான திட்டம் ஒன்று நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

