கிளமெண்டி பலதுறை மருந்தகம், 2027ஆம் ஆண்டில் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் உள்ள புதிய இடத்துக்கு மாறவிருக்கிறது.
கிளமெண்டி அவென்யூ 3ல் அமைந்திருக்கும் இடத்தைவிடப் பெரிய பரப்பளவில் அமையவிருக்கும் இந்தப் பலதுறை மருந்தகத்தில் கூடுதலான மருத்துவச் சேவைகளை வழங்கப் போதிய இட வசதி இருக்கும் என்று கூறப்பட்டது.
1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளமெண்டி பலதுறை மருந்தகம் சிங்கப்பூரின் ஆகப் பழைய பலதுறை மருந்தகங்களில் ஒன்று. அதேநேரத்தில் ஆகச் சிறிய பலதுறை மருந்தகங்களில் ஒன்றான இது, கிளமெண்டி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
தேவைகள் அதிகரிக்கும் நிலையில் அந்தக் கட்டடத்தில் செயல்படும் மற்ற நிறுவனங்களிடம் இருந்து இடத்தை வாடகைக்குக் கேட்கவேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
கிளமெண்டி பலதுறை மருந்தகத்தின் புதிய வளாகம் அமையவிருக்கும் இடத்தை தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று அறிவித்தார். புதிதாகக் கட்டப்படவிருக்கும் தாமான் ஜூரோங் பலதுறை மருந்தகம் கார்ப்பரேஷன் டிரைவில் அமையும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
முன்னாள் வெஸ்ட் பாயிண்ட் மருத்துவமனை அமைந்திருந்த இடத்தில் அது கட்டப்படும். தாமான் ஜூரோங் பலதுறை மருந்தகம் 2028ஆம் ஆண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பலதுறை மருந்தகங்களில் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது முக்கியம் என்று கூறிய டாக்டர் ஜனில், குடியிருப்பாளர்களுக்குக் கூடுமானவரையில் முழுமையான சேவை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.