சமய அடிப்படையில் வெறுப்பைத் தூண்டும் பேச்சை சிங்கப்பூர் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியிருக்கிறார்.
இணையத்தின் வழியாக இத்தகைய பேச்சுகள் சிங்கப்பூரை எட்டுவதைத் தடுக்க முடியாவிட்டாலும் நேரில் இங்கு வந்து யாரும் இத்தகைய வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துவதை அரசாங்கத்தால் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதத்தைத் தூண்டும் சொல்லாட்சி மிக்க பேச்சுகளுக்குப் பின்விளைவுகள் உண்டு என்பதைச் சுட்டிய மூத்த அமைச்சர், பயங்கரவாத அச்சுறுத்தலைச் சமாளிக்க சமூக அளவிலான முயற்சிகளை மேற்கொள்வது முக்கியம் என்று வலியுறுத்தினார்.
இளையர்கள் நம்பகமான சமயத் தலைவர்களின் வழிகாட்டுதலை நாடவேண்டும் என்றும் தீவிரவாதத்தையும் சமயங்களுக்கு இடையே வெறுப்பையும் தூண்டக்கூடிய உரைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் திரு டியோ கேட்டுக்கொண்டார்.
'ஆர்ஆர்ஜி' எனும் சமய மறுவாழ்வுக் குழு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் காணொளி வழியாக உரையாற்றிய அவர், இந்தோனீசிய சமய போதகர் அப்துல் சோமாட் படுபாரா தனது ஆதரவாளர்களைச் சமூக ஊடகங்களில் சிங்கப்பூருக்கு எதிராகத் தூண்டிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பும் வகையில் அமைந்திருந்த உரையை நிகழ்த்தியதால் சோமாட்சிங்கப்பூருக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.
மற்ற சமயங்கள்மீது அவதூறு பரப்பும் வகையிலும் வெடிகுண்டுகளைக் கொண்டு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவதை அங்கீகரிக்கும் விதமாகவும் சோமாட்டின் உரை அமைந்திருந்தது.
சிங்கப்பூர் இஸ்லாத்தின் மேல் வெறுப்பைக் காட்டுவதாக சோமாட்டும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு
ஆதாரம் ஏதும் இல்லை என்பதை மூத்த அமைச்சர் எடுத்துக்கூறினார்.
கிறிஸ்துவம், இஸ்லாம் என எந்தச் சமயத்தின் போதகராக இருந்தாலும் அவர் வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்தினால் சிங்கப்பூர் அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று கூறிய திரு டியோ, சோமாட்டின் உரைகளை இணையத்தில் கேட்ட 17 வயது சிங்கப்பூர் இளையர் தற்கொலைத் தாக்குதல்காரர்கள் தியாகிகள் என்று நம்பியதையும் 2020ஆம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.
சுயமாகவே தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோர் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குவதையும் மூத்த அமைச்சர் டியோ சுட்டினார்.
கொவிட்-19 கிருமிப்பரவலின்போதும் சமய மறுவாழ்வுக் குழு, இஸ்லாமிய சமயக் கல்விமான்கள், சமயக் கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் தீவிர சித்தாந்தத்தில் ஆர்வம்காட்டுவோருக்கு ஆலோசனை வழங்கும் செயலில் ஈடுபடுவதை அவர் பாராட்டினார்.

