தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் (ஐஎம்டிஏ) தேசிய ஆய்வு அறநிறுவனமும் (என்ஆர்எஃப்) இணைந்து புதிய தேசிய மின்னிலக்க நம்பகத்தன்மை மையம் ஒன்றை அமைக்க $50 மில்லியனை முதலீடு செய்யவுள்ளன.
சிங்கப்பூரின் தகவல் ரகசிய பாதுகாப்புத் தீர்வுகள், உள்ளூர் திறனாளர்களை வளர்ப்பது போன்ற நம்பகத்தன்மை சார்ந்த தொழில்நுட்பத்தில் சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்கங்களை இந்நிலையம் வழிநடத்தும்.
இந்த மையத்தை உருவாக்கும் பொறுப்பு நன்யாங் தொழில்நுட்ப நிறுவனத்திடம் வழங்கப்படும் என்று 'ஆசிய தொழில்நுட்பம், சிங்கப்பூர்' மாநாட்டில் நேற்று பேசிய தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவித்துள்ளார். ஐஎம்டிஏ ஏற்பாட்டில் ரிட்ஸ்கால்ட்ரன், மில்லேனியா ஹோட்டலில் இம்மாநாடு நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
"இந்த மையம் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு, மொழிபெயர்ப்பு நம்பகத்தன்மை சார்ந்த தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும்," என்று அறிவார்ந்த தேச முயற்சிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி டியோ கூறினார்.
"இது நம்பகமாக தரவுப் பகிர்வு மற்றும் கணக்கிடுதல், மின்னிலக்க அடையாள முறைகள், அமைப்பின் நம்பகத்தன்மையை மதிப்பிடும் வழிமுறைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
"உள்ளூர் பங்குதாரர்களுடன், அனைத்துலக பொதுத்துறை, தனியார் துறை பங்காளிகளுடனும் இந்த மையம் இணைந்து செயல்படும்," என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.
மின்னிலக்க நம்பகத்தன்மை என்பது மின்னிலக்கத் தளங்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் மக்கள், நிறுவனங்கள், தொழில்நுட்பச் செயல்முறைகள் ஆகியவற்றில் பயனாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவைக் குறிக்கிறது.
இந்தப் புதிய மையம், உயர்கல்வி, ஆய்வு நிறுவனங்கள் மின் னிலக்க நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பி கட்டிக்காக்க உதவும். மேலும் உள்ளூர் அனைத்துலக ஒத்துழைப்பை இத்துறையில் ஊக்குவிக்கவும்; கல்வியாளர்களும் நிறுவனங்களும் சந்தைப்படுத்துவதற்கு தயார்நிலையில் தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கவும் உதவும்.
தரவுப் பகிர்வில் உள்ள சவால்களை சமாளிக்க, வணிகங்கள் நம்பகமான தொழில்நுட்பங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான சூழலையும் இது வழங்கும்.