உயர்நிலைப் பள்ளி காலத்திலிருந்தே அறிவியலில் ஆர்வமும் தொண்டூழிய முனைப்பும் உள்ளவர் பொது சுகாதார மருத்துவர் மா. பிரெமிக்கா, 26.
வருங்காலத்தில் சிங்கப்பூரின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதையும் பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை இளையர்களிடையே கொண்டுசெல்வதையும் தமது லட்சியமாக இவர் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற இவர், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் (Johns Hopkins University) ஓராண்டுகால பொது சுகாதார முதுகலைப் பட்டத்தை (Masters of Public Health) மேற்கொள்ள இருக்கிறார்.
"கொவிட்-19 நோய்த்தொற்று காலகட்டத்தில் பணிபுரிந்தபோது, சிங்கப்பூருக்கு தேவையான கொவிட் தடுப்பூசி எண்ணிக்கையை நிர்ணயிப்பதும் பூஸ்டர் தடுப்பூசியின் தேவையைக் கணிப்பதும் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் பெரிய சவால்களாக இருந்தன" என்று பிரேமிக்கா கூறினார்.
சிங்கப்பூரின் முதல் 50 கொவிட்-19 நோயாளிகளில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த இவர், மனஉளைச்சலுக்கு ஆளான நோயாளிகளுக்கு உடல் மற்றும் மனரீதியான சிகிச்சை அளிப்பது மிகுந்த சவாலாக இருந்ததாகக் கூறுகிறார். 200க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகளுக்கு இணையம் வழி மருத்துவம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தேசிய நூலக வாரியத்தின் இளம் எழுத்தாளர்கள் வட்டத்தின் செயல்குழு உறுப்பினராகவும், கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
மற்றொரு மருத்துவரான ஹைரில் ரிசால் அப்துல்லா, சுகாதார அமைச்சின் நிதிக் குழுவின் துணை இயக்குநரான மேத்தியூ லீயு ஆகியோரும் உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.