டாட்டா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கியதால் போட்டித்தன்மை குறைந்துவிடக்கூடும் என்று சிங்கப்பூரின் போட்டித்தன்மை, வாடிக்கையாளர் ஆணையம் கூறியுள்ளது.
ஒரே மாதிரியான பயணிகள் விமானச் சேவைகள், சரக்கு விமானச் சேவைகளை வழங்கும் மூன்று முக்கிய நிறுவனங்களில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய இரண்டும் அடங்கும் என்று ஆணையம் சுட்டியது.
சிங்கப்பூருக்கும் புதுடெல்லிக்குமான விமானச் சேவைகள், சிங்கப்பூருக்கும் மும்பைக்கும் இடையிலான சேவைகளை அவை கிட்டத்தட்ட ஒரே மாதிரி வழங்குகின்றன.
இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே சரக்குகளையும் ஏற்றிச் செல்கின்றன என்றது ஆணையம்.
இரண்டு விமான நிறுவனங்களுக்கும் இடையே தான் ஆக அதிகமான போட்டி இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அது குறிப்பிட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாட்டா குழுமத்தின் முதன்மை நிறுவனமான டாட்டா சன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் விஸ்தாராவை கூட்டாக நடத்துகின்றன.
இப்போது ஏர் இந்தியாவை டாட்டா குழுமம் வாங்கியுள்ளது.
ஏர் இந்தியாவை டாட்டா வாங்கியதன் தொடர்பில் விண்ணப்பம் ஒன்றை அதன் துணை நிறுவனமான டாலாஸ் சிங்கப்பூர் போட்டித்தன்மை, வாடிக்கையாளர் ஆணையத்திடம் கடந்த ஜனவரி சமர்ப்பித்தது.
அதன்படி அந்த பரிவர்த்தனை, சிங்கப்பூரில் போட்டித்தன்மையைக் கணிசமாகக் குறைப்பதைத் தடுக்கும் 2004 போட்டித்தன்மைச் சட்டத்தை மீறுகிறதா என்று ஆணையம் மறுஆய்வு செய்து வருகிறது.
மறு ஆய்வின் முதல்கட்டம் முடிந்துவிட்டது.
ஏர் இந்தியா, விஸ்தாரா இரண்டுக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்கப் போட்டி தந்தாலும், அந்தப் போட்டித்தன்மை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆணையம் கூறியது.
அதே போல இண்டிகோ போன்ற நிறுவனங்களிடமிருந்து போதிய அளவுக்கு போட்டி இருக்குமா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக ஆணையம் கூறியுள்ளது.