திருமணத்தின்போது புதுமணத் தம்பதிக்கு மொய்ப் பணம் கிடைப்பது வழக்கம். ஆனால், $1 மில்லியன் மொய்ப் பணம் கிடைத்ததால் பின்னர் மணவிலக்கு கோரிய தம்பதியிடையே நீதிமன்றத்தில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சீனர்களின் வழக்கப்படி பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் தேநீர் திருமணச் சடங்கு நடைபெற்றது. அந்தச் சடங்கின்போது $1 மில்லியன் காசோலை கொண்ட சிவப்பு உறையை மணமகனின் தந்தை தந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தம்பதி மணவிலக்கு கோரியபோது அந்த $1 மில்லியன் மொய்ப் பணம் தொடர்பிலும் கணவரின் 'சிங்கப்பூர் ஐலண்ட் கண்ட்ரி கிளப்' குழிப்பந்தாட்ட உறுப்பினர் சலுகை தொடர்பிலும் தம்பதியர் மோதிக்கொண்டனர்.
எண்ணெய், எரிவாயு நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியாக அந்தக் கணவரும் தனியார் மருந்தகத்தில் பல் மருத்துவராக அந்த மனைவியும் உள்ளனர்.
தங்களின் 30களில் இருக்கும் அவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.
விலை மதிப்பிற்குரிய சொத்துகளை எவ்வாறு இருவருக்கிடையே பங்கு போடுவது என்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முடிவெடுத்த பிறகு, இந்தத் தம்பதியின் மணவிலக்கு, பிற்கால வழக்குகளுக்கு ஒரு மேற்கோளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்தபோது மகனுக்கே அந்த மொய்ப் பணம் சேரவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த $1 மில்லியனை அந்தத் தந்தை வழங்கியிருப்பதாக முடிவானது. அதே தேநீர் சடங்கின்போது மணமகளுக்கு $20,000 மதிப்பிலான நகைகள் வழங்கப்பட்டன.
திருமணத்திற்குமுன் மணப்பெண்ணுக்கு $270,000 மதிப்பிலான 'பிஎம்டபுள்யூ' கார் ஒன்றையும் மணமகனின் தந்தை தந்துள்ளார்.
கணவரிடமிருந்து மணப்பெண்ணுக்கு $100,000 மதிப்பிலான நகைகளும் கிடைத்துள்ளன.
இதற்கிடையே கணவனுடன் நடந்த ஓர் உரையாடலை ரகசியமாகப் பதிவுசெய்திருந்தார் அந்த மனைவி. $1 மில்லியன் மொய்ப் பணம் இருவருக்குமே சொந்தம் என்று அந்தக் கணவர் ஒப்புக்கொள்வதாக அந்தப் பதிவில் அமைந்துள்ளது.
மணமகனின் தந்தை குறிப்பாக ஏன் முக்கியமாகக் கருதப்படும் தேநீர் சடங்கின்போது அந்த மொய்ப் பணத்தைத் தரவேண்டும் என்றும் மேல்முறையீட்டு நீதிபதி வினவினார். தம்பதியின் திருமணம் சார்ந்த சொத்துகளில் ஒன்றாக அந்த மொய்ப் பணம் கருதப்படும் என்றும் அது இருவருக்கும் பிரித்துத் தரப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.