சிங்கப்பூரின் முதல் மருந்து வழங்கும் இயந்திரம் இந்த ஆண்டு இறுதிக்குள் யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் பொதுமக்களுக்கு சேவையாற்றவிருக்கிறது.
மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு நோயாளிகள் தற்போது வரிசையில் காத்திருந்து மருந்துகளைப் பெற வேண்டியுள்ளது. இயந்திரம் சேவை வழங்கத் தொடங்கிய பிறகு இவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பதிவுசெய்வது முதல் கட்டணம் செலுத்தவும் மருந்துகளை வாங்கவும் பதிவுசெய்வது வரை, நோயாளிகளுக்கு முழுமையான மின்னிலக்க அனுபவத்தை வழங்கத் திட்டமிடும் மருந்தக முயற்சியின் ஓர் அங்கம் இந்தப் புதிய இயந்திரம்.
தொலைமருத்துவத் திட்டத்தின்கீழ் நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே மருத்துவப் பராமரிப்பைப் பெறவும் திட்டமிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. காணொளி மூலம் ஆலோசனை, தொலைதூரப் பராமரிப்புக் கண்காணிப்பு, தொலைதூரப் பராமரிப்புக்கான ஆதரவு போன்றவற்றை இத்திட்டம் சாத்தியமாக்கும்.
1, சின் செங் அவென்யூவில் அமைந்திருக்கும் யூனோஸ் பலதுறை மருந்தகத்தின் அதிகாரபூர்வ திறப்புவிழாவில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சுகாதாரப் பராமரிப்புக்கு குழு அடிப்படையிலான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கூடுமானவரையில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு குழுவினரை நியமிக்க இந்த அணுகுமுறை வகைசெய்யும்.
ஒரு குழுவில் அதிகபட்சம் மூன்று குடும்ப மருத்துவர்கள் இடம்பெறுவர். நாள்பட்ட நோய்களை நிர்வகிக்க பிணைப்பு அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாள்வது இவர்களது முக்கியப் பொறுப்பாக இருக்கும் என்றார் அவர்.
இத்தகைய பிணைப்பால் நம்பிக்கை உருவாகும்; நம்பிக்கை ஏற்பட்டால் நோயாளி மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்ற விரும்புவார். பின்னர் சுயமாகக் கண்காணிக்கவும் பராமரித்துக்கொள்ளவும் அவர் தயாராகிவிடுவார் என்று அமைச்சர் விளக்கினார்.
பராமரிப்புக் குழுவில் சுகாதாரப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர், பராமரிப்புப் பயிற்றுவிப்பாளர் போன்றோரும் இடம்பெற்றிருப்பர்.
சுகாதார அமைச்சின் 'ஹெல்தியர் எஸ்ஜி' உத்திக்கு ஏற்றவாறு யூனோஸ் பலதுறை மருந்தகத்தின் அணுகுமுறை அமைந்திருக்கும்.
ஊடுகதிர் சேவை, மகளிர், சிறாருக்கான சேவைகள், தடுப்பூசிகள், பல் மருத்துவம் போன்றவையும் இதில் வழங்கப்படும்.
யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் நோயாளிகள் இனி விரைவாக மருந்துகளைப் பெறலாம்