வருமான வரி சட்டத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகம் சம்பாதிப்போர் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற அம்சமும் அந்த மாற்றங்களில் அடங்கும்.
அந்தச் சட்டத்திற்கான மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை நிதி அமைச்சு நாடுகிறது.
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது வருமான வரி சட்டத்திற்கான உத்தேச மாற்றங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
2024 மதிப்பீட்டு ஆண்டில் இருந்து அதிகம் சம்பாதிப்போருக்கு அதிக வரி விதிக்கும் ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர்வாசி ஒருவர் ஈட்டும் $500,000லிருந்து $1 மில்லியன் வரைப்பட்ட வருமானத்திற்கு 23% வரி விதிக்கப்படும். $1 மில்லியனுக்கும் மேற்பட்ட வருமானத்திற்கு வரி 24% ஆக இருக்கும்.
$320,000 முதல் $500,000 வரை வருவாய் ஈட்டுவோருக்கு உரிய வரி விகிதம் தொடர்ந்து 22% ஆகவே இருக்கும்.
இந்த வரி அதிகரிப்பு தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் ஆக அதிகம் செலுத்தும் 1.2 விழுக்காட்டினரைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு இதன்மூலம் கூடு தலாக $170 மில்லியன் வருவாய் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த பிப்ரவரியில் புதிய வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்வாசிகள் அல்லாத மற்றவர்களின் குறிப்பிட்ட வருமானத்திற்கு 24% வரி விதிக்கப்படும். வருமான வரி சட்டத்திற்கு எட்டு உத்தேசத் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இந்த மாற்றங்களும் உள்ளடங்கும்.
அதிகாரப் பணிகளுக்காக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வகைசெய்வது உள்ளிட்ட பலவும் இதர சாத்தியமான மாற்றங்களில் அடங்கும்.
அந்த உத்தேச மாற்றங்கள் இப்போதைய வரிக் கொள்கைகளுக்கும் நிர்வாகத்திற்கும் 15 மாற்றங்களை தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் வருமான வரி (திருத்தம்) மசோதா 2022 நகலை நிதி அமைச்சின் இணையத் தளத்தில் காணலாம்.
அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான ரீச் அமைப்பின் இணையவாசலிலும் அந்த விவரங்கள் இருக்கின்றன. பொதுமக்கள் ஜூலை 6ஆம் தேதிக்குள் தங்கள் கருத்து களைத் தாக்கல் செய்யலாம்.

