சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் நெருங்கிய அண்டை நாடுகள் மட்டுமல்ல என்றும் அவை ஒத்துழைத்தும் நல்லுறவு காத்தும் இந்த வட்டாரத்தின் பல்லாண்டுகால அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பங்காற்றி உள்ளன என்றும் இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ கூறியுள்ளார்.
திரு பிரபோவோ நேற்று புக்கிட் கோம்பாக்கில் உள்ள தற்காப்பு அமைச்சு வளாகத்தில் நேற்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்தார்.
"கடற்கொள்ளை போன்ற நாடுகடந்த சவால்களைச் சமாளிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டும். அதனால் இந்த நெருங்கிய நட்பும் ஒத்துழைப்பும் முக்கியம்," என்று இரு அமைச்சர்களும் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் திரு பிரபோவோ கூறினார்.
"எங்கள் இரு நாடுகளும் ஆசியானும் முன்னேறுவதற்காக, இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கும் இந்த வட்டாரத்துக்கும் பலன் ஏற்படுத்தவும் அனைத்துலக தரநெறிகளை வலியுறுத்தவும் விரும்புகின்றன," என்று திரு இங் குறிப்பிட்டார்.
இரண்டு அமைச்சர்களும் இந்த வட்டாரத்தில் உள்ள பாதுகாப்புச் சவால்கள், சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை பற்றி இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
அமெரிக்கா, சீனா பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திரு பிரபோவோ, இரு நாடுகளும் இந்தோனீசியாவுக்கு நல்ல நட்பு நாடுகள் என்று தெரிவித்தார்.
இரண்டு வல்லரசு களுக்கும் இடையே கருத்து உடன்பாடு ஏற்படுத்துவதில் இந்தோசீனியா பங்காற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

