முரசொலி
இப்போதைய உலகப் பொருளியல் நிலவரம் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கிறது.
கொரோனா ஒடுங்கி எல்லைகள் திறக்கப்படுவதால் உலக அளவில் சுற்றுலா தொடர்பிலான தொழில்துறைகள் தலைதூக்கி சூடுபிடிக்கின்றன. பொருளியல்கள் திறந்துவிடப்படும் சூழலில் கட்டுமானத் துறையும் வேகம் எடுக்கிறது.
சீனாவில் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் அகன்று அதன் விளைவாக இந்த ஆண்டின் பிற்பாதியில் உற்பத்தித்துறையும் வர்த்தகம் தொடர்பான சேவைத்துறைகளும் ஏறுமுகமாகி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை அதிகமாகி வருகிறது.
இத்தகைய சாதகமான நிலவரங்கள் இருக்கின்ற அதே வேளையில் விலைவாசி- அதாவது பணவீக்கம் கடுமையாகக் கூடுகிறது; உலக அளவில் நிதித்துறை நிலவரங்கள் இறுக்கமடைகின்றன; நம்முடைய முக்கியமான ஏற்றுமதிச் சந்தைகளின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது.
நன்மை, தீமை இரண்டையும் பொருளியல் இப்போது எதிர்நோக்குகிறது என்றாலும் பொருளியல் தராசு பாதகமான சூழலுக்கு ஆதரவாக கீழே இறங்குகிறது என்றுதான் கணிக்கத் தோன்றுகிறது.
உக்ரேன்-ரஷ்யா போர் இப்போதைக்கு முடிவுக்கு வரும் போல் தெரியவில்லை. இவ்விரு நாடுகளும் எண்ணெய், உணவு தானியங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக இருப்பதால் உலக அளவில் உக்ரேன் போரின் தாக்கம் எண்ணெய், உணவு விலைகளில் செம்மையாகப் பிரதிபலிக்கிறது. இந்த பாதகம் அதிக காலம் நீடிக்கும் என்றும் கடுமையாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
உக்ரேன் போருக்கு முன்பே பணவீக்கம் ஏறுமுக நிலைக்குத் திரும்பியது. போர் நிலவரமும் சேர்ந்து கொண்டதால் பணவீக்கம் இப்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் உலக வங்கி இந்த வாரம் உலகப் பொருளியல் வாய்ப்பு அறிக்கையை வெளியிட்டது. உலகப் பொருளியல் இந்த ஆண்டு 4.1% வளரும் என்று அந்த வங்கி கடந்த ஜனவரியில் முன்னுரைத்தது.
ஆனால் 2022 வளர்ச்சி அந்த அளவுக்கு இருக்காது, அது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் குறைந்து 2.9%தான் இருக்கும் என்று உலக வங்கி இப்போது அறிவித்துள்ளது.
இதுபோலவே, அனைத்துலக பண நிதியமும் தன் பொருளியல் வளர்ச்சி கணிப்பைக் குறைத்துவிட்டது. உலகப் பொருளியல் இந்த ஆண்டில் 4.4% வளரும் என்று ஜனவரியில் அறிவித்த இந்த நிதியம் அந்த வளர்ச்சி 3.6% ஆகத்தான் இருக்கும் என்று இப்போது கூறுகிறது.
அந்த அமைப்புகள் உலகப் பொருளியல் நிலவரத்துக்கு ஏற்ப அப்போதைக்கு அப்போது காலக்கிரம முறைப்படி தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருபவை. ஆனால் மூன்றே மாதங்களில் தங்கள் கணிப்பை அவை குறைத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அவை இப்படி செய்வதில்லை. இது, உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக ஏற்படக்கூடய தாக்கங்கள் அதிக காலத்திற்கு நீடிக்கும் என்பதையே காட்டுவதாகத் தெரிகிறது.
இவை எல்லாம் ஒருபுறம் என்றால், பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பு இடையூறுகள் தொடரும் சூழலும் இருக்கிறது. இவற்றின் காரணமாக மத்திய வங்கி கொள்கை மாற்றத்தைக் கைக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அதன் விளைவாக பொதுமக்கள் பயனீடு குறையக்கூடிய, வளர்ச்சி மெதுவடையக்கூடிய சூழல் ஏற்படலாம் என்பதையும் தவிர்ப்பதற்கில்லை.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. உலகப் பொருளியல், 'பணவீக்கத்துடன் கூடிய மந்தம்' என்ற ஒரு வலையில் சிக்கிவிடக்கூடிய வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.
உலகம் 2007ஆம் ஆண்டில் சந்தித்ததைப் போன்ற உணவு நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய ஆபத்தை வளர்ந்த நாடுகள் பலவும் எதிர்நோக்குகின்றன. வட்டி விகிதங்கள் கூட்டப்படுவதால் கடன் நெருக்கடியும் கடுமையாகும் நிலையும் உள்ளது.
உலகப் பொருளியல் நிலவரங்கள் இப்படி இருப்பதால் அதைப் பெரிதும் சார்ந்துள்ள பொருளியலைக் கொண்ட சிங்கப்பூரில் பாதிப்பு இருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். ஆகையால் உலக அமைப்புகளைப் போலவே உள்ளூர் பொருளியல் வல்லுநர்களும் சிங்கப்பூர் வளர்ச்சிக் கணிப்பைக் குறைத்து இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பொருளியல் நிபுணர்களின் கருத்துகள், முன்னுரைப்புகள் அதில் அடங்கி இருந்தன.
சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டில் 3.8%தான் வளரும் என்று அவர்கள் இப்போது கணிக்கிறார்கள் என்பது அந்த அறிக்கை மூலம் தெரியவந்தது. அந்த வளர்ச்சி 4% இருக்கும் என்று சென்ற மார்ச் மாதம்தான் அவர்கள் கணித்து இருந்தார்கள். சென்ற ஆண்டு சிங்கப்பூர் பொருளியல் 7.6% வளர்ந்து இருந்தது.
வளர்ச்சி கணிப்பைக் குறைத்து இருக்கும் வல்லுநர்கள், பணவீக்கம் 5%ஆக உயர்ந்துவிடும் என்றும் எச்சரித்து இருக்கிறார்கள். பணவீக்கம் 3.6% ஆக இருக்கும் என்று மார்ச்சில் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி 3% முதல் 5% வரை இருக்கும்; என்றாலும்கூட 3% முதல் 4% வரை வளர்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்று அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
ஆனாலும்கூட, இந்த ஆண்டு வளர்ச்சி அரசாங்கக் கணிப்பைவிட குறைவதற்கு வாய்ப்பு இருப்ப தாக ஒரு சிலர் முன்னுரைக்கிறார்கள்.
உலகளவில் பொருளியல் நிலவரங்கள் நிச்சயமில்லாமலேயே இருக்கின்றன. உக்ரேன் போர் எவ்வளவு காலம் தொடரும் என்பது தெரியவில்லை; எண்ணெய், உணவு விலை எந்த அளவுக்கு உயர்ந்துகொண்டே போகும் என்பதும் விளங்கவில்லை;
நிதித்துறை நிலவரங்கள் எந்த அளவுக்குக் கடுமையாகும் என்பதும் புரியவில்லை. ஆகையால் எந்த ஒன்றையும் உறுதியாக கணித்துக் கூறமுடியவில்லை. இருந்தாலும் சாதகங்களைவிட பாதகங்களே கொஞ்சகாலத்திற்கு ஒரு கை ஓங்கி இருக்கும் என்றுதான் இப்போதைக்கு கணிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள், கொள்கைகளை உருவாக்குவோர் அனைவருமே சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, எப்படிப்பட்ட ஒரு சூழலும் வரலாம் என்பதை எதிர்நோக்கி, விவேகத்துடன் கெட்டிக்காரத்தனத்துடனும் நடந்துகொள்வது முக்கியம்.

