சீனாவின் முரட்டுத்தன அணுகுமுறையைக் குறைகூறி அமெரிக்கா எச்சரிக்கை
இந்தோ பசிபிக்கில் எல்லைகள் தொடர்பில் சீனா முரட்டுத்தனமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின் நேற்று கடுமையாகக் குறைகூறினார்.
ஷங்ரிலா மாநாட்டில் உரையாற்றிய அவர், ஆசியாவில் அமெரிக்காவின் பங்காளித்துவ உறவை மறுஉறுதிப்படுத்தினார்.
விதிமுறைகள், பரஸ்பர மரி யாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள அனைத்துலக ஒழுங்கு மீறப்படுமானால் உக்ரேன் போன்ற குழப்ப நிலைதான் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாளுவதில் ஆசியான் அமைப்பு நடுநிலையைக் கையாளுகிறது என்பதை, ஆசியா, ஐரோப்பாவைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள், உயர்நிலை அதிகாரிகள் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினைகள் சூடுபிடிக்கும் சூழலில் அந்த இரு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் ஆசியான் நாடுகளுக்கு ஏற்படக்கூடாது.
இதுவே சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் நீண்ட நெடுங்கால நிலைப்பாடாக இருந்து வருகிறது என்பதை அமெரிக்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆசிய பசிபிக்கைப் பொறுத்தவரை தனது அணுகுமுறையில் அமெரிக்கா எல்லாரையும் உள்ளடக்கும் போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றார் அவர்.
தோழமை நாடுகளுடன், பங்காளிகளுடன் அது ஒத்துழைப்பை விரிவுபடுத்தும். புதிய, இப்போதைய வட்டார அமைப்புகளுடன் சேர்ந்து அமெரிக்கா பாடுபடும் என்றும் திரு ஆஸ்டின் குறிப்பிட்டார்.
ஒரு மணி நேரம் உரையாற்றிய அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆசிய பசிபிக்கில் சீனாவின் அணுகுமுறையை குறைகூறினார்.
கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுடன் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை இருக்கிறது.
தென் சீனக் கடலைப் பொறுத்தவரை வியட்னாம், இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், மலேசியா, புருணை ஆகிய நாடுகள் உள்ளிட்ட பல ஆசியான் நாடுகளுடன் கடல் எல்லைப் பிரச்சினைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.
இமாலய எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியாவும் சீனாவும் குவித்து உள்ளதை அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் நடவடிக்கைகள் இந்தோ பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பு, நிலைப்பாடு, செழிப்பு ஆகியவற்றுக்கு மிரட்டலாக இருக்கிறது என்றார் அமெரிக்க அமைச்சர்.
இந்தோ பசிபிக் முழுவதும் அமெரிக்கா தீவிர ஈடுபாட்டை நிலைநாட்டி வரும் என்றும் திரு ஆஸ்டின் உறுதிகூறினார்.
இதனிடையே, அமெரிக்க அமைச்சரின் பேச்சு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் நிறைந்தது என சீனா பதிலடி கொடுத்தது.
"நாங்கள் எங்களுடைய மிகக் கடுமையான அதிருப்தியையும் உறுதியான எதிர்ப்பையும் தெரியப்படுத்துகிறோம்," என்று சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டு அதிகாரிகள் துறையின் துணைத் தலைவரான லெஃப்டினென்ட் ஜெனரல் ஸாங் ஸென்ஜோங் சிங்கப்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

