சந்தேக ஆடவர் கைது
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைதானார். அந்த 27 வயது ஆடவர், அரசாங்க ஊழியர் கடமை ஆற்றுவதைத் தடுக்கும் வகையில் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது. மத்திய விரைவுசாலையில் கார்-லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் அந்த ஆடவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த விபத்து நேற்று காலை 8.09 மணிக்கு நிகழ்ந்த தாக காவல் துறை தெரிவித்தது. விபத்தில் சிக்கிய இரண்டு பெண் பயணிகளும் 40 வயது லாரி ஓட்டுநரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். புலன்விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்தது.
மூவர் மீது குற்றச்சாட்டு
ஆபத்தான ஆயுதத்துடன் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் இரண்டு பேர் கைதானார்கள். குற்றவாளிக்குப் புகலிடம் கொடுத்தது, இதர குற்றச்செயல்களுக்காக ஆடவர் ஒருவர் கைதானார்.
கஃப் ரோட்டில் இம்மாதம் 4ஆம் தேதி அதிகாலை இரண்டு ஆடவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
இம்மாதம் 4ஆம் தேதியும் 7ஆம் தேதியும் 26 வயதும் 28 வயதும் உள்ள இருவர் பிடிபட்டனர்.
கைதான 26 வயது ஆடவர் மீது இம்மாதம் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. மற்றொருவர் மீது இம்மாதம் 9ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. 28 வயது ஆடவர் கைதானபோது 34 வயது ஆடவர் ஒருவரும் பிடிபட்டார். அவர் மீதும் 9ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஓசிபிசி வங்கி மன்னிப்பு கேட்டது
ஓசிபிசி வங்கியின் இணையப் பட்டுவாடா சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியாழக்கிழமை பிற்பகல் நேரத்தில் பாதிக்கப்பட்டது. இதற்காக அந்த வங்கி மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
பணப் பட்டுவாடா சேவை வியாழக்கிழமை பிற்பகல் 3.19 மணி முதல் 5.45 மணி வரை பாதிக்கப்பட்டது. வெற்றிகரமான முறையில் நடக்காத பணப் பரிவர்த்தனை கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக இது பற்றி கேட்டபோது வங்கி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆடவர் தடுத்துவைப்பு
சிங்கப்பூர் ஜமா இஸ்லாமியா கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான முகம்மது ஹாசன் சைனுதீன், 48, என்பவர் பயங்கரவாதம் தொடர்பிலான செயல்களில் ஈடுபட்டதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரலில் தடுத்துவைக்கப்பட்டார்.
சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, ஜமா இஸ்லாமியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை அடுத்து அந்த நபர் 2001ஆம் ஆண்டு சிங்கப்பூரை விட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.
அங்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பிடிபட்டு, குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் அவர் தண்டனையை அனுபவித்து முடித்ததும் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
அவரை உள்நாட்டு பாதுகாப்புத் துறை கைது செய்தது என்று இது பற்றி கேட்டதற்கு இந்தத் துறை தெரிவித்த தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
பிடிபடாமல் இருந்துவந்த சிங்கப்பூர் ஜமா இஸ்லாமியா கட்டமைப்பின் கடைசி நபர் இவர்தான் என்றும் அந்தத் துறை கூறியது.

