கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மனுதாரர்களில் அதிகாரிகளைப் பார்க்க ஏற்கெனவே நேரம் குறிக்கப்பட்டவர்கள் மட்டுமே நாளை முதல் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையக் கட்டடத்திற்குள் செல்ல முடியும்.
அவசரமாகப் பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது; ஆனால், அதிகாரிகளைப் பார்க்க நேரம் குறிக்கப்படவில்லை என்றால் அவர்கள், இணையம் மூலம் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் நேற்று தெரிவித்தது.
அப்படி செய்ய இயலாதவர்கள் ஆணையத்தின் கட்டடத்திற்குச் சென்று அதிகாரிகளின் உதவியுடன் அங்குள்ள கணினிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் புதிய ஏற்பாடு கடவுச்சீட்டு சேவைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். இதர சேவைகளுக்கு இந்த ஏற்பாடு பொருந்தாது.
சிங்கப்பூர் தனது எல்லைகளை கடந்த ஏப்ரல் மாதம் பரந்த அளவில் திறந்துவிட்டது. அதனை தொடர்ந்து ஆணையத்தின் கட்டடத்தில் நீண்ட வரிசை காணப்படுகிறது. கட்டடத்தின் உள்ளே செல்லும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
தங்களுடைய விண்ணப்பங்கள் பற்றி தெரிந்துகொள்ள பலரும் அலுவலகம் வந்திருக்கிறார்கள். விரைவாக கடவுச்சீட்டுகளை வழங்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இதன்விளைவாக கூடுதலான அதிகாரிகளைப் பணியில் அமர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
குறிப்பிடப்பட்ட நேரத்தில் வந்து கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கும் விண்ணப்பதாரர்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அத்தாட்சி சான்றிதழ்களைக் காட்டி கட்டடத்தின் உள்ளே செல்ல வேண்டும். அப்படி வருவோர் கூட்டத்தைக் குறைத்தும்கொள்ளும் வகையில் தனியாக வரும்படி ஆணையம் ஆலோசனை கூறியது.
நாடு முழுவதும் இருக்கும் 27 அஞ்சலகங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து தங்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும்படி விண்ணப்பதாரர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் 2022 மார்ச் முதல் அதிகரித்துள்ளன. முன் ஒருபோதும் இல்லாத வேகத்தில் கடவுச்சீட்டுகளைத் தயாரித்து ஆணையம் அவற்றை வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் இப்போது வழங்கப்படுகின்றன.
இதைச் சாதிக்க அதிக அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றிவருகிறார்கள்.

