உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி ஷங்ரிலா கலந்துரையாடலில் காணொளி வழியாக நேற்று பேசினார். அவருடைய உரை ஒரு புறம் இருக்க, அவர் அணிந்திருந்த டீ சட்டை பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இந்தச் சட்டையை வடிவமைத்த பெருமை சிங்கப்பூர் இளையரான 16 வயது அவா சோவைச் சேரும். ஒரு பெண் உருவம் உக்ரேனிய கொடியில் உள்ள நீலம், மஞ்சள் வண்ணங்களை தீட்டுவது போல் அந்தக் கருப்பு சட்டையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை வடிவமைத்ததோடு, தன் கைப்பட எழுதிய கடிதத்துடன் அவா சோ அதை அதிபர் ஸெலென்ஸ்கிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். உக்ரேனுக்கு உதவுவதற்காக தான் தொடங்கிய திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அதிபர் ஸெலன்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் அவா கேட்டுக்கொண்டார்.
அதிபர் ஸெலென்ஸ்கி இந்தச் சட்டையை அணிவார் என்று அவா கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
"நான் ஒரு வாரத்துக்கு முன்தான் சட்டையை அவருக்கு அனுப்பிவைத்தேன். அதை அணிந்து அத்தனை பேர் முன்னிலையில் அவர் உரை நிகழ்த்தியதை நினைக்கும்போது என்னால் என் எண்ணங்களை வருணிக்கமுடியவில்லை", என்றார் இந்த இளையர்.
செயிண்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் உயர்நிலை நான்கில் படிக்கும் அவா, டீ சட்டையை ஏப்ரல் மாதம் வடிவமைக்கத் தொடங்கினார்,
"நான் மக்களுக்கு உதவ எண்ணினேன். எனக்கு அவ்வாறு தான் என் பெற்றோர் கற்றுக்கொடுத்துள்ளனர். தன்னம்பிக்கை வளர்க்கவும், பெண்களும் தங்கள் நாட்டுக்குப் பங்களிக்கலாம் என்று வலியுறுத்தவும் நான் இந்த முயற்சியை மேற்கொண்டேன்", என்கிறார் அவா.

