சிங்கப்பூரில் 2025க்குள் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளும் அதிகரிக்கப்படும் என அமைச்சு அறிவித்தது.
தற்போது அத்தகைய 119 நிலையங்கள் உள்ளன.
இதோடு, அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தாதிமை இல்லங்களில் உள்ள படுக்கைகள் 31,000க்கு அதிகரிக்கப்படும்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் பணித்திட்ட கருத்தரங்கில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இத்தகவல்களைத் தெரிவித்தார். முதியயோர் பராமரிப்புச் சேவைகளை ஒருங்கிணைக்க இந்த அமைப்பு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.
நாட்டில் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. இதனால் அதிகமான மூத்தோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளிலும், தாதிமை இல்லங்களிலும் சிகிச்சை பெறக்கூடும். இவற்றின் பளுவை முதியோர் பராமரிப்பு நிலையங்கள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

