அரசாங்கம் நுரையீரல் புற்றுநோய் தொடர்பான புதிய ஆய்வுக்கு 25 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
நுரையீரல் புற்றுநோய்க்கான ஆகச் சிறந்த சிகிச்சைமுறைகளைக் கண்டறிவது நோக்கம்.
ஐந்து ஆண்டுகள் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த ஆய்வை சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையம் வழிநடத்தும்.
நுரையீரல் புற்றுநோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புற்றுநோய்க்கட்டியுடன் தொடர்புடைய உடல் மாற்றங்களை ஆய்வாளர்கள் அடையாளம்காண முயல்வர். இதன் மூலம் தனிப்பட்ட சிகிச்சைமுறையை வடிவமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
நுரையீரல் புற்றுநோய் இதர வகைப் புற்றுநோய்களில் இருந்து மாறுபட்டது. 'கீமோதெரபி' எனும் பாரம்பரிய முறை சிகிச்சை முறை இதற்கு அதிகம் பலனளிப்பதில்லை.
எனவே நோயாளியின் உடலில் தோன்றக்கூடிய மாற்றங்களை ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆகச் சிறந்த சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வு முனையும் என்று ஆய்வை வழி நடத்தும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மூத்த நிபுணத்துவ மருத்துவரான பேராசிரியர் பியர்ஸ் சோ கூறினார்.
சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய் ஆண்களில் அதிகம் காணப்படும் மரணம் விளைவிக்கக்கூடிய மூன்றாவது நோயாகவும் பெண்களில் இத்தகைய ஐந்தாவது நோயாகவும் விளங்குகிறது.
நுரையீரல் உடலின் உள்ளே அமைந்திருக்கும் உறுப்பு என்பதால் இந்த வகைப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்றும் அறிகுறிகள் தெரியும்போதே நோய் முற்றிய நிலையை எட்டியிருக்கும் என்றும் பேராசிரியர் சோ கூறினார்.
தற்போது நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க உதவும் 'இம்யூனோதெரபி' சிகிச்சைமுறைதான் நுரையீரல் புற்று நோய்க்கு ஆகச் சிறந்த சிகிச்சையாகக் கருதப்படுகிறது. ஆனால் 30 விழுக்காட்டு நோயாளிகள் மட்டுமே இதன் மூலம் பலனடைவதாகப் பேராசிரிய சோ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் மருத்துவமனைகளிலும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் 11 மருத்துவமனைகளிலும் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதத்திலிருந்து நோயாளிகளுக்கு ஆய்வுரீதியிலான சிகிச்சை தொடங்கும்.

