வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்களைக் கண்டறிய நிறுவனங்களில் சோதனை தீவிரம்
தரக்குறைவான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் செயல்பாட்டைக் கொண்ட நிறுவனங்கள் இன்று முதல் கடுமையான தண்டனையை எதிர்நோக்கும்.
பாதுகாப்புச் சோதனையின்போது கண்டறியப்படும் குற்றங்களுக்கான அபராதங்களை இரட்டிப்பாக்குவது உள்ளிட்டவை இவற்றில் அடங்கும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகபட்ச அபராதமாக $5,000 விதிக்கப்படும்.
நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலோ ஊழியர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தாலோ, தற்போதைய நடைமுறையை மறுஆய்வு செய்ய வெளியிலிருந்து கணக்குத் தணிக்கையாளர்களை அவை ஈடுபடுத்த வேண்டும்.
டேஃபு லேனில் நேற்று நடத்தப்பட்ட வேலையிடப் பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, இந்த விவகாரத்தை கீழ் இருந்து மேலே எதிர்கொள்வது முக்கியம் என்றார்.
"பாதுகாப்பைப் பொறுத்தமட்டில், வேலையிடத்தில் நிறுவனங்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது அண்மையில் நாங்கள் மேற்கொண்ட சோதனைகளில் தெளிவாகத் தெரிகிறது," என்று திரு ஸாக்கி கூறினார்.
இவ்வாண்டு இதுவரை வேலையிட விபத்துகளில் 26 பேர் உயிர் இழந்துவிட்டனர். 2016க்குப் பிறகு இதே காலகட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவே ஆக அதிகம்.
இதைத் தொடர்ந்து, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தை மறுஆய்வு செய்வதற்கு நேரத்தை ஒதுக்க முதலாளிகளுக்கு நினைவூட்டப்பட்டது.
இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 200க்கும் அதிகமான வேலையிட விபத்துகள் ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.
வேலையிட விபத்துகளில் உயிரிழந்தோர், கடுமையாக காயமுற்றோரில் 65 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றியதாகவும் அமைச்சு சொன்னது.
திரு ஸாக்கியும் மனிதவள அமைச்சை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் கோ செங் லாய் நிறுவனத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அந்நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளையும் நடப்பில் உள்ள பாதுகாப்பு அம்சங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பளுதூக்கியை (forklift) இயக்கியவர் ஒருவர் உரிமம் பெறாதது, அந்நிறுவனத்தின் இரண்டாம் தளத்தில் போதுமான தடுப்புவேலிகள் இல்லாதது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதனால், அந்நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

