2019 அக்டோபர் 8ஆம் தேதி, சாலையில் கார் ஓட்டிய மருத்துவர் ஒருவர், எதிரே வாகனங்கள் வருகின்றனவா என்பதைக் கவனிக்கத் தவறினார். இதனால், போக்குவரத்துச் சந்திப்பில் மற்ற வாகனங்களுக்கு வழிவிட இவர் தவறினார்.
எர்னஸ்ட் ஃபூ வெய்ஸோங், 39, எனும் அந்த மருத்துவர், காரை வலது பக்கம் திருப்புவதற்கு முன்பு வெள்ளை கோட்டில் நிறுத்தவும் இல்லை. இதன் விளைவாக, அவரது காரும் திரு சூன் ஜின் ஜோக் என்பவர் ஓட்டிய காரும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. காரை நிறுத்துவதற்கு முன், மணிக்கு 76 கிலோமீட்டர் வேகத்தில் திரு சூன் காரை ஓட்டினார். ஆனால், அந்தச் சாலையின் வேக வரம்பு மணிக்கு 60 கிலோமீட்டர்.
அந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திரு சூனின் தாயாரான திருவாட்டி ஹெங் ஃபோங் போய், 96, என்பவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. காரில் இருந்தபோது அவர் இருக்கை வாரை அணியவில்லை. விபத்து ஏற்பட்டு நான்கு நாள்கள் கழித்து அவர் மரணமடைந்தார்.
ஃபூவுக்கு நேற்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கவனக்குறைவாக காரை ஓட்டி கடுமையான காயம் விளைவித்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
அனைத்து வகை வாகனம் ஓட்டும் உரிமையை வைத்திருக்கவோ வாகனங்களை ஓட்டவோ அவருக்கு ஈராண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேக வரம்பை மீறி காரை ஓட்டியதற்காக திரு சூனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களைப் பற்றி இணையத்தில் தேடுகையில், டான் டோக் செங் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவைச் சேர்ந்தவர் டாக்டர் ஃபூ எனத் தெரியவந்தது.
அவர் மருத்துவ ஆலோசகராக பதவி வகிப்பபதாக மருத்துவமனையின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

