வெளிநாட்டு ஊழியர்களை நோக்கி அவதூறுகளை வீசிய ஆடவர் குற்றவாளி என்று தீர்ப்பு

வெளிநாட்டு ஊழியர்களை நோக்கி அவதூறுகளை வீசிய ஆடவர் குற்றவாளி என்று தீர்ப்பு

2 mins read
a9eaae3f-9576-46a9-ab49-eaa28e94f9ee
-

கடந்த ஆண்டு ஜூலையில் மழைக்காக ஒதுங்கிய இரண்டு வெளிநாட்டு ஊழியர்களை நோக்கி இனவாத அவதூறுகளைக் கூறிய ஆடவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களான ரத்தினசிங்கம் ஜதீசன், கிரு‌ஷ்ணன் கார்த்திகேயன் ஆவர்.

லீ போ கியன் எனும் ஆந்த ஆடவர்மீது, தொல்லை தந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் கொவிட்-19 தற்காலிக விதிமுறைகள் சட்டத்தை மீறியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன. அவர் குற்றவாளி என்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) அன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தோ பாயோ லோரோங் 5ல் அடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி நடந்தது இந்தச் சம்பவம்.

வெளிநாட்டு ஊழியர்கள் இருவரும் அங்கு பணி நிமித்தமாக அளவு எடுத்துக் கொண்டிருந்தனர்.

மழை பெய்யத் தொடங்கியபோது இருவரும் அருகே இருந்த வழிப்பாதையில் ஒதுங்கினர்.

அவர்களிடம் சென்ற லீ, "நீங்கள் என் நாட்டுக்குள் வந்தது தவறு...இந்த அரசாங்கமும் சட்டவிரோதமானது. நாங்கள் உங்களை வெளியேற்றுவோம்," என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசினார்.

திரு ரத்தினசிங்கம் ஜதீசன் அதை தமது கைபேசியில் பதிவு செய்தார்.

சிங்கப்பூரில் "வெளிநாட்டவரால் ஏற்பட்டுள்ள நெரிசல் குற்ற நிலவரம்" ஆகியவற்றால் அத்தகை சொற்களைப் பயன்படுத்த அரசியல் சாசனப்படி தமக்கு உரிமை இருந்தது என்று லீ கருதியதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

திரு ரத்தினசிங்கம், திரு கிரு‌ஷ்ணன் இருவரும் லீயை முன்பின் பார்த்தது இல்லை.

லீயின் சொற்கள் இருவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

லீக்கு வரும் 21ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.