கொவிட்-19 கொள்ளைநோயால் கடந்த ஈராண்டுகளாக சவால்களும் தடைகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்தன. அந்தச் சூழலிலும் புதிய அம்சங்களில் வளர்ச்சி காணும் வாய்ப்பை கொவிட்-19 உலகெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்னிலக்க உருமாற்றம் தொடர்பில் வர்த்தகத் தலைவர்களுக்கிடையே நடந்த குழுக் கலந்துரையாடல் ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டது.
ஹில்டன் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் இந்தோனீசியா-சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் இந்தோனீசியத் தூதரகமும் இந்தோனீசிய வர்த்தக, தொழில் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுகாதாரப் பராமரிப்பு, மின்னிலக்க உருமாற்றம், நீடித்த நிலைத்தன்மை ஆகிய தலைப்புகள் தொடர்பில் பேசினர்.
இணைய வர்த்தகம் மீது கொரோனா கிருமிப் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எட்டா தொலைவில் உள்ள பயனீட்டாளர்களையும் சென்றடைவதைக் கிருமித்தொற்று சூழல் ஊக்குவித்தது என்றார்
'சீ குருப்' நிறுவனத்தின் குழுமத் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு காங் யெ.
கொள்ளைநோயால் வர்த்தக ரீதியாக எழும் தேவைகள், மந்த நிலைக்குத் தள்ளப்பட்டபோது நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை நாடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே, தெமாசெக் நிறுவனமும் கூகல் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஓர் அண்மைய ஆய்வு குறித்து தெமாசெக்கின் தென்கிழக்காசியப் பிரிவுத் துணைத் தலைவர் திரு ஃபோக் வாய் ஹோங் பகிர்ந்துகொண்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தொடர்ந்து பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது, திறன் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
இணையப் பொருளியலில் அங்கம் வகிப்பதற்குத் தயாராகும் நிலையில் சிங்கப்பூரின் தொழிலாளர் பிரிவினர் திறன் மேம்பாட்டிலும் புதுத் திறன் பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு ஃபோக் வலியுறுத்தினார்.

