கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து ஏற்றம்
தொடர்ந்து 22வது மாதமாக கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை ஏறுமுகமாகப் பதிவாகியுள்ளது. அதிகமான கூட்டுரிமை வீடுகளும் கைமாறியுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் வீட்டு விலை 8.4% உயர்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. இவ்வாண்டு மே மாதத்தில் 1,572 வீடுகள் கைமாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
3வது காலாண்டில் வர்த்தகம்
மேம்படும் என்ற நம்பிக்கை குறைவு
வரும் மூன்றாவது காலாண்டில் வர்த்தகம் மேம்படும் என்று உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையே உள்ள நம்பிக்கை சற்று குறைந்துள்ளதாக வர்த்தக நம்பிக்கைநிலை குறியீடு காட்டியுள்ளது. உலகளாவிய பொருளியல் மந்தநிலையும் அரசியல் நிலையற்ற தன்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சிங்கப்பூர் வர்த்தக கடன் இலாகா நேற்று தகவல் வெளியிட்டது. இருப்பினும் ஒட்டுமொத்த வர்த்தக எதிர்பார்ப்புகள் நம்பிக்கை தரக்கூடியதாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆய்வு: பத்தில் ஒன்பது பேர்
அறிவியலை நம்புகிறார்கள்
அறிவியல் மீதும் விஞ்ஞானிகள் மீதும் சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகம் என்றாலும் பொய்யான தகவல்கள் பரவுவதன் மூலம் இது பாதிக்கப்படலாம் என்று வருடாந்திர ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. 17 நாடுகளைச் சேர்ந்த 1,000 பெரியவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சிங்கப்பூரர்கள் பத்தில் ஒன்பது பேர் அறிவியலையும் விஞ்ஞானிகளையும் நம்புகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டன. அதேபோல் அனைத்துலக அளவிலும் அதே பத்தில் ஒன்பது பேர் என்று பதிவாகியிருந்தது. இருப்பினும் சிங்கப்பூரர்கள் தங்களது தகவல்களை எந்தத் தளத்தின்வழி பெறுகிறார்கள் என்பதும் அந்த நம்பிக்கையைக் குலைக்கலாம் என்று கூறப்பட்டது.

